‘கட்சியில் இருக்கட்டுமா, போகட்டுமா?’ - காங்கிரஸ் தலைமைக்கு ஹர்திக் நேரடி எச்சரிக்கை

‘கட்சியில் இருக்கட்டுமா, போகட்டுமா?’ - காங்கிரஸ் தலைமைக்கு ஹர்திக் நேரடி எச்சரிக்கை

இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. குஜராத் காங்கிரஸின் நம்பிக்கைக்குரிய இளம் தலைவரான ஹர்திக் படேல், கட்சித் தலைமை தன்னை நடத்தும் விதம் குறித்து கடும் அதிருப்தியில் இருக்கிறார். பிரச்சினை உச்சமடைந்திருக்கும் நிலையில், தான் கட்சியில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து காங்கிரஸ் தலைமை ஒரு முடிவை எடுக்கட்டும் எனப் பகிரங்கமாகவே அதிருப்தியைப் பதிவுசெய்திருக்கிறார்.

பாடிதார்கள் என அழைக்கப்படும் படேல் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரி போராட்டங்களை நடத்திய ஹர்திக் படேல், நம்பிக்கைக்குரிய இளம் தலைவராகக் கருதப்பட்டார். மத்திய – மாநில பாஜக அரசுகளுக்குக் கடும் தலைவலியாக உருவெடுத்த அவர் ஒரு கட்டத்தில் காங்கிரஸில் இணைந்தார். 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அவரைக் கட்சியில் சேர்த்தார்.

இந்நிலையில், தன்னைக் கட்சியிலிருந்து நீக்க சிலர் சதிசெய்வதாகச் சில நாட்களுக்கு முன்னர் ஹர்திக் படேல் குற்றம்சாட்டியிருந்தார். யாரையும் அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைமையைத்தான் அவர் குறிப்பிடுகிறார் எனப் பேச்சுகள் எழுந்தன.

மாநில காங்கிரஸ் தலைமை தன்னை எந்தக் கூட்டத்துக்கும் அழைப்பதில்லை என்றும், எந்த முடிவு குறித்தும் தன்னிடம் ஆலோசிக்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். பாடிதார் போராட்டத்தால் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது பாஜகவை வீழ்த்துவதில் முனைப்பு காட்டாமல் தங்களுக்குள் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்டிருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருப்பதாகக் கூறிய அவர், இவ்விஷயத்தில் குஜராத் மாநில காங்கிரஸார் மீது கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

“ஹர்திக் கட்சியில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என காங்கிரஸைச் சேர்ந்த பலரும் கருதுகிறார்கள். எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டால் இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் எனக்குக் கிடைக்கும் வளர்ச்சி தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சிலர் நினைத்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்” என்று அவர் கூறியிருந்தார். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட புது மாப்பிள்ளை மாதிரி கட்சியில் தனது நிலைமை இருப்பதாகக் கிண்டலாகத் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களிலேயே, பாஜகவைப் புகழ்ந்து பேசி காங்கிரஸ் கட்சியினரை அதிரவைத்தார். அரசியல் ரீதியாக பாஜக எடுத்த முடிவுகளைப் பாராட்டிய அவர், அக்கட்சி வலிமையுடன் இருப்பதால்தான் அப்படியான முடிவுகளைத் துணிந்து எடுக்கிறது என்று புகழ்ந்திருந்தார். குஜராத்தில் காங்கிரஸ் வலிமை பெற வேண்டும் என்றால், முடிவெடுக்கும் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

இதையடுத்து, இதையடுத்து அவர் பாஜகவில் இணைகிறாரா என்று பரபரப்பு கிளம்பியது. எனினும், அந்தத் தகவல்களை அவர் மறுத்தார். அதுதொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்திருந்த பேட்டியை ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் ஹர்திக், ‘நான் இன்னமும் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். நான் கட்சியிலேயே தொடர்வது குறித்து மத்திய தலைவர்கள் ஒரு முடிவை எட்டுவார்கள் என நம்புகிறேன். ஏனெனில், நான் கட்சியைவிட்டு விலக வேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். என் மன உறுதியைச் சிதைக்க அவர்கள் விரும்புகிறார்கள்’ என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in