மேல் படிப்புக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி தனலட்சுமி. தனியார் விளையாட்டு பயிற்சி நிறுவனம் ஒன்றில் செல்வம் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய இரண்டாவது மகள் கிருத்திகா வண்டலூர் தனியார் கல்லூரி ஒன்றில் பி. காம் படித்து வருகிறார்.
இந்த நிலையில், கிருத்திகா உயர்கல்வி படிப்பதற்கான உதவித்தொகை குறித்து மனு அளிக்க கடந்த 18-ம் தேதி, காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம், மறைமலை நகரில் நடைபெற்றது.
கள ஆய்வுக்காக வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், திடீரென காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் வளர்ச்சி பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.
அந்த சமயத்தில், அங்கிருந்த பொதுமக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த மாணவி கிருத்திகாவிடமும் எதற்காக வந்தீர்கள் என கேள்வி எழுப்பியபோது, உயர்கல்வி படிப்பதற்கு உதவித்தொகை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்த அரசு அதிகாரிகளிடம் மாணவிக்கு, அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து மாணவியின் உயர் கல்விக்கு தேவையான முப்பதாயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மாணவியிடம் வழங்கினார். கோரிக்கை வைத்த ஒரு சில தினங்களுக்குள் தனது கோரிக்கையை நிறைவேற்றித் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.