‘நிதியமைச்சர் ஆடியோவை தடயவியல் தணிக்கை செய்ய வேண்டும்’ -அண்ணாமலை அடுத்த அதிரடி!

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்நிதியமைச்சர் ஆடியோ விவகாரம்; தடயவியல் தணிக்கை செய்ய வேண்டும் - அண்ணாமலை கோரிக்கை!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசி இருந்த ஒலிநாடாவின் உண்மைத் தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக்கோரி, தமிழக ஆளுநரை பாஜக தலைவர்கள் சந்திக்க உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி, சபரீசன் ஆகியோர் ஊழல் செய்துள்ளதாக நிதியமைச்சர் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுத்துள்ளார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,'’ தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர், ஊழல் மூலம் ஒரே ஆண்டில் முப்பதாயிரம் கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக பேசி இருந்த, ஒலிநாடாவின் உண்மைத் தன்மையை சுதந்திரமான, நியாயமான தடவியல் தணிக்கை செய்யக்கோரி, தமிழக பாஜக தலைவர்கள் குழு ஆளுநரை இன்று சந்திக்க உள்ளனர்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்த ஒலிநாடா பொய்யானது; யார் குரலில் வேண்டுமானாலும் இப்படி பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால் அவர் அந்த ஒலிநாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதைப் போல ஒரு ஒலிநாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன் என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார்.

தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்க வேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திலும் சமர்ப்பிக்கலாம். இரண்டு ஒலி நாடாக்களின் உண்மை தன்மையை நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும்.

காலம்காலமாக பதவிகள் எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு, தனது கட்சி தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்டவைத்து ஏமாற்றுவது போல, இது அத்தனை எளிதானதல்ல என்பதை தமிழக நிதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால் நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு நம் தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல. அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று தமிழக நிதியமைச்சரை மிகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in