அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்- அண்ணாமலை இடையே கடும் சொற்களால் மோதல்!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்- அண்ணாமலை இடையே கடும் சொற்களால் மோதல்!

கார் மீது காலணி வீசியது தொடர்பாக தமிழக நிதியமைச்சர பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. லட்சுமணனின் உடலுக்கு மரியாதை செய்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வர இருந்தார். இதையடுத்து, பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமையில் 50 பாஜகவினர் விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது, அங்கு அஞ்சலி செலுத்த வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினரை வெளியேறுமாறு உத்தரவிட்டதால் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திய பின்னர் தான் பாஜகவின் அஞ்சலி செலுத்த வேண்டும் என கூறியதாகவும், இதனால் அங்கிருந்த பாஜகவினர் ஆத்திரமடைந்ததாகவும் கூறப்பட்டது.

தொடர்ந்து ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்ற நிலையில், அவர் காரை பாஜகவின் வழி மறித்து கோஷம் எழுப்பினர். அத்துடன் அவர் கார் மீது சிலர் காலணியை வீசினர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் சரவணன், அமைச்சரை சந்தித்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அண்மையில், அந்த தாக்குதல் தொடர்பாக அண்ணாமலை பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தான் பேசிய ஆடியோ தான் என்று ஒத்துக் கொண்டார் அண்ணாமலை. இந்நிலையில், பெயர் குறிப்பிடாமல் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அவரது (அண்ணாமலை) பெயரை கூட நான் குறிப்பிட விரும்பவில்லை. தேசியக்கொடி பொருத்தப்பட்ட கார் மீது காலணியை வீச ஏற்பாடு செய்தது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் அவர், தமிழ் சமூகத்தின் சாபக்கேடு. அந்த சாபம் பாஜக மீதும் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு கீழ் அண்ணாமலை தொடர்பான செய்திகள் குறித்தும் அமைச்சர் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு காட்டமாக பதில் அளித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, பெரிய பரம்பரையில் பிறந்தவர் என்பதை தவிர வேறு எந்த பயனுள்ள செயலை செய்துள்ளீர்கள். முன்னோர்களின் முதல் எழுத்துகளில் மட்டுமே வாழ்ந்தவர்களுக்கு ஒரு விவசாயி மகன் வளர்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் தான் அரசியலுக்கும் மாநிலத்திற்கும் சாபக்கேடு ஆனவர்கள். என் காலணிகளுக்கு கூட நிகர் இல்லை என்று விமர்சித்துள்ளார். இருவருக்குமான வார்த்தை போர் எங்கு போய் முடியப்போகிறது என்று தெரியவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in