தமிழகம் முழுவதும் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பதற்றமோ, பீதியோ அடைய வேண்டிய தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதன் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு கேட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பதற்றமோ, பீதியோ அடைய வேண்டிய தேவையில்லை. இதுவரை 6613 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது, இதில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தமிழக அரசு காய்ச்சல் பரவல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் வீடுதிரும்புவார் ‘’ என்றார்.