தொண்டர்கள் எங்கள் பக்கம்தான்: உண்ணாவிரத போராட்டத்திற்கு கூட்டத்தை கூட்டிய சி.வி.சண்முகம்

திண்டிவனத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டம்
திண்டிவனத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டம்

அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் திமுக அரசு கைவிடுவதாக கூறி அதனைக் கண்டித்து அதிமுக சார்பில் திண்டிவனத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் கடந்த அதிமுக அரசு சார்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் தினமும் 60 எம்எல்டி கடல் நீரை குடிநீராக்கும் வகையில் நிலையம் அமைக்கவும், அதன்மூலம் விழுப்புரம் நகராட்சி, திண்டிவனம் நகராட்சி, விக்கிரவாண்டி பேரூராட்சி, மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம், வானூர், மைலம், விக்கிரவாண்டி, காணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 692 கிராம குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு திமுக அரசு இத்திட்டத்தை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட அம்மா பல்கலைக்கழக அறிவிப்பையும் திமுக அரசு கைவிட்டது.

எனவே இவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் நேற்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும், அதற்குத் தேவையான நிதியினை உடனடியாக விடுவித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் திண்டிவனத்தில் இன்று காலை 9 மணி முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமையில் திண்டிவனம் காந்தி சிலை அருகில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கட்சியில் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் தொண்டர்களை தங்கள் பக்கம் நிலை நிறுத்துவதற்கான வாய்ப்பாகவும் இந்த போராட்டத்தினை சண்முகம் நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in