ஃபரூக் அப்துல்லாவுக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை: என்ன வழக்கு தெரியுமா?

ஃபரூக் அப்துல்லாவுக்கும் சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை: என்ன வழக்கு தெரியுமா?

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பண முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

2004 முதல் 2009 வரை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.113 கோடி பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையால் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஃபரூக் அப்துல்லா 2001 முதல் 2012 வரை விளையாட்டு அமைப்பின் தலைவராக இருந்தார். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் அப்துல்லா தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், பி.சி.சி.ஐ-யின் நிதியுதவியை மோசடி செய்ய விளையாட்டு அமைப்பில் நியமனங்களை செய்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ஏற்கெனவே இந்த விவகாரத்தில் 2019 மற்றும் 2020 ம் ஆண்டிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பாக 2020 டிசம்பரில் அப்துல்லாவின் சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ஃபரூக் அப்துல்லா இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

84 வயதான ஃபரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை மே 31 அன்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. இந்த நிலையில் அவர் மீண்டும் ஆகஸ்ட் 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

மூன்று முறை ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தன் மீது தவறு இல்லை என்றும், ஜம்மு காஷ்மீரில் விரைவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in