3வது நாளாக தொடரும் போராட்டம்; விவசாயிகளுடன் இன்று அரசு பேச்சுவார்த்தை!

விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் இன்று மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கடந்த 2020-2021 ஆகிய ஆண்டுகளில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு, ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், 3 சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும் விவசாயிகள் முன்வைத்த பிற கோரிக்கைகள் அப்போது நிறைவேற்றப்படவில்லை. அதன்படி முனைவர் சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 700 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்

மேலும் மின்சார திருத்த மசோதா 2020ஐ ரத்து செய்ய வேண்டும் எனவும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழில்களை சார்ந்தவர்களின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது. லக்கிம்கேரி சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் பல்வேறு அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்
விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்

இதன் காரணமாக பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் டெல்லி சலோ போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். கடந்த 13ம் தேதி தங்களது பேரணியை விவசாயிகள் துவங்கிய நிலையில், மாநில எல்லைகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். காவல்துறையினர் குவிக்கப்பட்டு விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்த தடுப்புகள், முள்வேலிகள் மற்றும் பள்ளங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தண்ணீர் பீரங்கி ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா
மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா

இதனிடையே இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இரண்டு முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய வேளாண்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா கோரிக்கை விடுத்தார். இதன்படி இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய், பியூஷ் கோயல் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

இன்று மாலை நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு தரப்பிற்கும் இடையே சுமூகமான தீர்வு ஏற்படுத்தப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் குறைந்தபட்ச ஆதார விலையை உடனடியாக நிர்ணயிக்க முடியாது என மத்திய அரசு கூறி வருவதால், போராட்டம் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in