​​‘ மத்திய அரசின் துரோகத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம்’ - அறைகூவல் விடுத்த விவசாயிகள் சங்கம்!

​​‘ மத்திய அரசின் துரோகத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம்’ - அறைகூவல் விடுத்த விவசாயிகள் சங்கம்!

கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடத்திய போராட்டங்களை வாபஸ் பெறுவதற்காக மத்திய அரசு தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்து விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் (எஸ்கேஎம்) தேசிய ஆலோசனைக் கூட்டம் காஜியாபாத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பு வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி டெல்லி எல்லை மற்றும் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போராட்டங்கள் கைவிடப்பட்டபோது விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளின்படி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழு அமைக்கப்படவில்லை என்றும், போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என்றும் கூறியுள்ளது. மத்திய அரசாங்கத்தின் இந்த துரோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் ஜூலை 18-ம் தேதி முதல் உத்தம் சிங்கின் தியாக தினமான ஜூலை 31 வரை நாடு முழுவதும் மாவட்ட அளவில் "துரோகத்திற்கு எதிரான போராட்டம்" மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சாரத்தின் முடிவில் ஜூலை 31 அன்று, நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in