உபியில் ஒருமுகமாய் திரண்ட விவசாயிகள்!

தேர்தலில் பாஜகவுக்கு பாடம்புகட்ட திட்டம்
உபியில் ஒருமுகமாய் திரண்ட விவசாயிகள்!
உபி மகா பஞ்சாயத்தில்...

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று 9 மாதங்களாக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள், நேற்று (செப்.5) கிஸான் மகாபஞ்சாயத்து என்ற பெயரில் உபியின் முசாபர் நகரில் ஒன்று கூடினார்கள். இந்தக் கூடலில், “பாஜகவின் கார்ப்பரேட் அரசிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம்” என்பதே விவசாயிகளின் ஒற்றை முழக்கமாக இருந்தது.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பது விவசாயிகளின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், அதில் திருத்தங்களை செய்வோமே தவிர அதை நிச்சயமாக திரும்பப்பெற மாட்டோம் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால், எந்த திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, அந்த சட்டங்களை திரும்பப் பெற்றே தீர வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள் விவசாயிகள்.

மத்திய அரசு இதுவரை 12 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பும் தங்கள் நிலையிலிருந்து இறங்கிவரவில்லை. அதனால் அரசு விவசாயிகளிடம் பேசுவதை கைவிட்டு, தனது வழக்கமான பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இப்படி தங்களைப் புறக்கணித்து வரும் மத்திய அரசை வழிக்குக் கொண்டுவர விவசாயிகளுக்கு வாகாக கிடைத்திருக்கிறது உத்திரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்.

2022 ஏப்ரல் மாதத்தில் உபியில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் திட்டத்தில் இருக்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். உபியில் ஆட்சியைப் பிடிப்பது என்பது மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்குச் சமம் என்று கருதும் பாஜக, அங்கு திரும்பவும் ஆட்சியை பிடிக்க முனைப்போடு செயலாற்றி வருகிறது. இடைத்தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் வென்ற தைரியத்தில் தெம்பாகவே இருக்கிறது உபி பாஜக.

மீண்டும் யார் முதல்வர் ஆவார் என்ற சமீபத்திய கருத்துக்கணிப்பும் ஆதித்யநாத்துக்கு சாதகமாகவே இருக்கிறது. அவருக்கு 48 சதவீதம் ஆதரவு இருக்கும் நிலையில், அகிலேஷ் யாதவுக்கு 37 சதவீதம் ஆதரவு இருக்கிறது. பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் இங்கு வலுவாகவே இருக்கின்றன. இருந்தாலும் 11 சதவீத வித்தியாசம் இருப்பதால் தைரியமாக இருக்கிறார் யோகி.

யோகி - மோடி
யோகி - மோடி

தற்போது அந்த தைரியத்தை குலைக்கத்தான் உபியில் ஒன்று கூடியிருக்கிறார்கள் விவசாயிகள். எங்கே அடித்தால் வலிக்குமோ அங்கே அடிப்பது என்பது அவர்களின் முடிவாக இருக்கிறது. உபியில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதன் மூலம், தங்களின் ஒற்றுமையை வெளியுலகத்துக்கு காட்ட விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். 15 மாநிலங்களில் இருந்து பல லட்சம் விவசாயிகளும், 150-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களும் இந்த மகா பஞ்சாயத்தில் ஒன்றுபட்டிருக்கின்றன.

இந்த கிஸான் மகா பஞ்சாயத்தில் பேசிய பாரதிய கிஸான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் தர்மேந்திர மாலிக், “பாஜகவின் கார்ப்பரேட் அரசிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்வோம்” என்றார். போராட்டம் நடத்திய விவசாயிகள்மீது போடப்பட்டிருக்கும் அனைத்து வழக்குகளையும் இம்மாதம் 8-ம் தேதிக்குள் வாபஸ் பெறவேண்டும் என்று யோகிக்கு கெடு விதித்திருக்கிறார்கள். நாடு முழுவதும் இதுபோன்ற மகா பஞ்சாயத்துகளை நடத்த இருப்பதாகவும் அங்கு முடிவு செய்திருக்கிறார்கள்.

அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில், பாஜக தவிர்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்க முனைந்திருக்கின்றன. அத்தகையை நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் உபி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க கங்கணம் கட்டி களமிறங்கி இருக்கிறார்கள் விவசாயிகள்.

உபியில் பாஜக தற்போதைய நிலையில் பலமுனை தாக்குதலை எதிர்கொள்ள வேண்டிருக்கிறது. அதனால் அக்கட்சி, விவசாயிகளை சமாதானப்படுத்தவே முயற்சிகளை மேற்கொள்ளும். அதற்கு முன்னோட்டமாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வருண்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். போராடும் விவசாயிகளை அரசு மீண்டும் அழைத்துப்பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இனியும், தங்களைப் புறக்கணிக்க முடியாது என்ற நெருக்கடியை பாஜகவுக்கு உருவாக்கியிருக்கிறார்கள் விவசாயிகள். இனியும் மத்திய அரசு பிடிவாதம் காட்டினால், அதற்கான விலையை உபி தேர்தலில் நிச்சயம் பாஜக கொடுக்க வேண்டி இருக்கும்!

Related Stories

No stories found.