சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்... கைவிட்டு போனது ‘விவசாயி சின்னம்’!

கரும்பு விவசாயி சின்னம்
கரும்பு விவசாயி சின்னம்
Updated on
2 min read

நாம் தமிழர் கட்சி கடந்த சில ஆண்டுகளாக தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு வந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வேறு ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னத்தை ஒதுக்கி உள்ளதால் அந்த சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிகளை இறுதி செய்வதிலும், பிரசார யுக்திகளை வகுப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக ஏற்கனவே உள்ள கூட்டணியோடு களமிறங்க உள்ள நிலையில், பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களது கூட்டணிக்கு புதிய கட்சிகளை இணைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கம் போல் இந்த முறையும் நாம் தமிழர் கட்சியை மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான்

இதையடுத்து பல்வேறு இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அக்கட்சி அறிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து அக்கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் விவசாய சின்னத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த முறையும் அந்த கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இதன் காரணமாக நாம் தமிழர் கட்சிக்கு அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளதாகவும், கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை வழக்கு தொடரப்பட்டாலும், தேர்தல் ஆணைய நடைமுறையில் தலையிட முடியாது என்பதால், உடனடியாக உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முடிவெடுக்காது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நாம் தமிழர் கட்சிக்கு வேறு சின்னம் ஒதுக்கப்படலாம் என்கிற கருத்து நிலவி வருகிறது. இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in