
சாவர்க்கர் மீதான ராகுலின் தாக்குதலுக்கு, காந்தி மற்றும் இந்திராவின் கடிதங்களை முன்வைத்து பாஜக பதிலடி கொடுத்துள்ளது. மேலும் ராகுல் தொடங்கிய சர்ச்சை காங்கிரஸின் சில கூட்டணி கணக்குகளையும் பதம் பார்த்துள்ளது.
நாடு தழுவிய ஒற்றுமை யாத்திரையயின் அங்கமாக அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் நுழைந்தார் ராகுல் காந்தி. மாநிலத்தை ஆளும் ஷிண்டே - பட்நாவிஸ் கூட்டணியை தாக்கும் விதமாக சாவர்க்கரை சாடும் சர்ச்சையில் மீண்டும் இறங்கினார் ராகுல். இந்துத்துவ சித்தாந்தவாதிகளில் ஒருவரான சாவர்க்கரை கூட்டம்தோறும் தாக்கி விமர்சித்து வந்தார். ‘இந்திய விடுதலை போராட்டத்தின்போது பிரிட்டிஷாருக்கு அஞ்சியிருந்தார் சாவர்க்கர். சிறையிலிருந்து விடுபட மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார்’ என்றெல்லாம் ராகுல் வழக்கம்போல தாக்கினார். உடனே சாவர்க்கரின் பேரன் காவல்நிலையத்தில் புகாரளிக்க, அரசியல் வட்டத்தில் இந்த சர்ச்சை பூதாகரமானது.
ராகுலுக்கு பதிலடி தரும் விதமாய், மாநிலத்தின் துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்நாவிஸ் 2 கடிதங்களை இன்று வெளியிட்டிருக்கிறார். நாட்டின் பிரதமராக அதற்கான அலுவல் மொழியில் இந்திரா காந்தி எழுதியிருக்கும் ஒரு கடிதத்தில் ’வீர் சாவர்க்கர் இந்தியாவின் தூண்களில் ஒருவர்’ என்று புகழ்ந்திருக்கிறார். மகாத்மா காந்தி எழுதியதான இன்னொரு கடிதத்தின் நிறைவு பகுதி, சாவர்க்கரின் கடித வரிகளை அப்படியே கைக்கொண்டுள்ளது. ’தங்கள் கீழ்படிந்த, உண்மையுள்ள பணியாளர்’ என்பது போன்ற வாசகங்களில் சாவர்க்கரை காந்தியின் கடிதம் ஒத்திருக்கிறது என்கிறார் பட்நாவிஸ்.
’ நமது மரியாதைக்குரிய மகாத்மா காந்தி மற்றும் உங்கள் பாட்டியார் இந்திரா காந்தியின் கடிதங்கள் இதோ. இவற்றுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் ராகுல்ஜி’ என்று மடக்கியிருக்கிறார் பாஜகவின் பட்நாவிஸ். இதற்கு ராகுல் இன்னமும் பதில் அளிக்கவில்லை.
ஆனால் மாநிலத்தில் காங்கிரசாரின் கூட்டணி கட்சியிடமிருந்து வேறு வகையான பதில் ராகுலுக்கு கிடைத்திருக்கிறது. ’மகா விகாஸ் அகாதி’ கூட்டணி குடையின் கீழ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்திருந்தன. இப்போது சிவ சேனாவை இரண்டாக உடைந்த ஷிண்டே தலைமையிலான அணி பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தின் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அவர்களிடம் ஆட்சியை பறிகொடுத்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனாவும், ராகுலின் சாவர்க்கர் விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிர மண்ணின் மைந்தரான சாவர்க்கர் மீதான ராகுல் விமர்சனத்தை மாநில காங்கிரசாரும் ரசிக்கவில்லை. சிவ சேனா எம்பியான சஞ்செய் ராவத், ராகுலின் பேச்சு கூட்டணியை உடைக்கும் என்று வெளிப்படையாகவே பதிலளித்திருக்கிறார். ராகுலின் ஒற்றுமை யாத்திரையில் கூட்டணியின் ஒற்றுமை விரிசல் கண்டிருக்கிறது.