சென்னையில் தொடங்கியது உண்மை கண்டறியும் சோதனை: ராமஜெயம் கொலை வழக்கில் அடுத்த மூவ்!

சென்னையில் தொடங்கியது உண்மை கண்டறியும் சோதனை: ராமஜெயம் கொலை வழக்கில் அடுத்த மூவ்!

ராமஜெயம் கொலை வழக்கில் கூலிப்படை தலைவன் உள்ளிட்டோரிடம் உண்மை கண்டறியும் சோதனையை தொடங்கியது சிறப்பு புலனாய்வு குழு பிரிவு.

திமுக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு திருச்சி மாவட்டம், திருவளர்ச்சோலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை திருச்சி போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்த எந்தவித துப்பும் கிடைக்காததால், அதன் பின்னர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. பல கட்ட விசாரணைகள் நடந்தும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாததால், தமிழக அரசு இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கவும், சிபிஐயின் விசாரணைக்கு உதவுவதற்காக சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.

சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்பியாக சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். பத்துக்கும் மேற்பட்ட டிஎஸ்பிக்கள் அடங்கிய இந்த குழு விசாரணையை துரிதப்படுத்தியது.

குறிப்பாக ராமஜெயம் கொலை நடந்த காலகட்டத்தில் சந்தேகப்படும் படியான பிரபல ரவுடிகள் 13 பேரின் செல்போன் இணைப்புகள் ஆக்டிவாக இருந்ததை அடிப்படையாகக் கொண்டு விசாரணை தொடங்கியது. இந்த 13 பேரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த கோரி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அதில் ஒருவர் மட்டும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, 12 பேரையும் விசாரிக்க மத்திய தடயவியல் நிபுணர்கள் குழு சென்னை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

முதல் கட்டமாக இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தடயவியல் அறிவியல் ஆய்வு சோதனை கூடத்தில் சந்தேகிக்கும் நபர்களான கூலிப்படைத் தலைவன் திண்டுக்கலை சேர்ந்த மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ் மற்றும் சத்யராஜ் ஆகிய நான்கு பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்காக ஆஜராகினர். விசாரணையின் போது அவர்களுடன் அவர்களது வழக்கறிஞரும் உடன் இருப்பார்கள். ஏற்கெனவே நீதிமன்றத்தில் எதிர்தரப்பினர், உண்மை கண்டறியும் சோதனையின் போது, ராமஜெயம் வழக்கு குறித்து மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை அதிகாரிகள் இந்த கொலை குறித்து சந்தேகப்படும் நபர்கள் ஒவ்வொருவரிடமும் சுமார் 15க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு, அப்படி கேட்கப்படும் போது அவர்களுடைய நாடித்துடிப்பு மற்றும் பிற உடல் அளவீடுகளை பதிவு செய்து அதில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அவர்கள் கூறும் பதில்கள் உண்மையானவையா அல்லது உண்மைக்கு மாறானவையா என்பதை ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கவுள்ளனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக, ஒன்றன் பின் ஒன்றாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில், விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள எட்டு பேர்களிடம் நாளை விசாரணை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in