மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் தேதி நீட்டிப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் தேதி நீட்டிப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் தேதியை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதில் முதல் மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 7.53 விழுக்காடு இணைக்கப்பட்டிருக்கிறது. குறைவாக கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்தில் 5.93 விழுக்காடு மின் இணைப்போடு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் வைத்த வேண்டுகோளை ஏற்று 2023 ஜனவரி 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே மின் நுகர்வோர்கள் ஜனவரிக்குப் பிறகு கால நீட்டிப்பு இருக்கும் என்று கருதாமல் மின் இணைப்போடு ஆதாரை இணைக்கும் பணிகளை செய்ய வேண்டும். 2,811 பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்னொரு சிறப்பு முயற்சியாக அந்தந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கும் பணிகளை மேற்கொள்ளப்படுவதற்கு இன்று அறிவுறுத்தபட்டிருக்கின்றன. நாளை ஆங்கில புத்தாண்டு என்பதால் மின்வாரியத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் நடைபெறாது. மறுநாள் தொடங்கி ஜனவரி 31-ம் தேதி வரை சிறப்பாக நடைபெறும்.

எனவே அதை பயன்படுத்தி 100 சதவீத இணைப்புக்கான முயற்சிகளை மின்வாரியம் எடுத்து இருக்கிறது. அதை செய்து முடிப்போம். நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு செய்யப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக அதற்கான ஆதாரங்களை கொடுத்தால் 48 மணி நேரத்தில் உடனடியாக மாற்றம் செய்யப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in