பாஜகவில் வெடிக்கும் ஆடியோ விவகாரம்: அண்ணாமலை, திருச்சி சூர்யா சிவா மீது போலீஸில் பரபரப்பு புகார்

பாஜகவில் வெடிக்கும் ஆடியோ விவகாரம்: அண்ணாமலை, திருச்சி சூர்யா சிவா மீது போலீஸில்  பரபரப்பு புகார்

பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா ஆகியோர் மீது மதுரையில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக சிறுபான்மையினர் அணி மாநில தலைவர் டெய்சி சரண், பாஜக ஓபிசி அணியின் மாநிலப்பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த ஆடியோவில் டெய்சி சரணை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்த பிரச்சினையில் திருச்சி சூர்யா சிவா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்சி நிகழ்வுகளி்ல் பங்கேற்கவும் திருச்சி சூர்யா சிவாவிற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை அண்ணா நகர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் மனு அளித்துள்ளார். அதில், அவர், ''கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள், ஊடகங்களில் பாஜக தமிழக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா , அக்கட்சியின் சிறுபான்மை அணி தலைவர் டெய்சி சரணை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியானது. திருச்சி சூர்யா சிவா டெய்சி சரணை, சங்கை அறுத்து சம்பவம் செய்திடுவேன். எனது சாதிக்காரனை ஏவி விட்டு கொன்று விடுவேன். நாங்கள் 68 சதவீதம் இருக்கிறோம் உள்ளிட்ட ஆபாச வார்த்தைகளால் மிரட்டியுள்ளார்.

மேலும், அக்கட்சி மாநில அமைப்புச் செயலர் கேசவ விநாயகம், அண்ணாமலை, ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்களையும் தொடர்புப்படுத்தி பேசி இருக்கிறார். இந்த ஆடியோவின் பிரதியை இப்புகாருடன் இணைத்துள்ளேன். இது பற்றி டெய்சி சரண் ஊடகத்தில் கூறும்போது, 'ஏற்கெனவே 15 நாளுக்கு முன்பே, இக்கொலை மிரட்டல் ஆடியோ பற்றி மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கூறியும், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நான் பார்த்துக் கொகள்கிறேன்' என அவர் கடந்து சென்றிருக்கிறார். திருச்சி சூர்யா சிவா மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின்படி தண்டனைக்குரியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓபிசி சமூகத்தை, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் மீது ஏவி விடுவேன் என்பது சமூகத்தின் இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டுவதுடன், பொது அமைதியை சீர்குலைக்க வன்முறையைத் தூண்டியிருக்கிறார். அவர் பெண்களைக் கேவலமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இவ்விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்ற சம்பவத்திற்கு புகார் கொடுக்காதது மற்றும் கொடுக்கச் சொல்லாதது, தெரிந்தே குற்றத்தை மறைக்கும், குற்றச் செயல். அவர் குற்றம் இழைத்துள்ளார்.

பாஜகவில் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடருகிறது. குறிப்பாக கே.டி.ராகவன் பிரச்சினை, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மீது பொது இடத்தில் பாலியல் வன்முறை நடந்துள்ளது. பதவி கொடுப்பதற்காக பாஜக சிறுபான்மை பிரிவு பெண்ணைப் பாலியல் ரீதியாக கேசவ விநாயகம் பயன்படுத்தினார் போன்ற குற்றச்சாட்டு சமூகத்திற்கே எதிரானது. இக்குற்றச் செயல்களில் ஈடுபட்ட திருச்சி சூர்யா சிவாவின் குற்றத்தை தெரிந்தே மறைத்த அண்ணாமலை மற்றும் சூரியா சிவா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் வாஞ்சிநாதன் கூறுகையில், " காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்" என்றார். இந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in