அண்ணாமலையா, குஷ்புவா... பரபரக்கும் பொள்ளாச்சி தொகுதி!

பொள்ளாச்சி பொள்லாச்சி
பொள்ளாச்சி பொள்லாச்சி

தற்போது திமுக வசமிருக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுக, அதிமுக, பாஜக என மும்முனைப் போட்டி ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. போதாக்குறைக்கு, கொங்குமண்டலத்தில் பாஜக வெற்றிவாகை சூடும் மூன்று தொகுதிகளில் ஒன்றாக பொள்ளாச்சியையும் அண்ணாமலை பட்டியல் போட்டிருப்பதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

பொள்ளாச்சியை பொறுத்தவரை வனமும் மலையும் சூழ்ந்த பகுதி. பொள்ளாச்சியின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. குறிப்பாக, தென்னை மற்றும் அது சார்ந்த தொழில்கள் அதிக அளவில் உள்ளன. இங்கு பெரிய அளவு தொழிற்சாலைகள் இல்லை என்றபோதும் விவசாயத்தால் வளம்கொழித்து வருகிறது இந்தத் தொகுதி.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி

பொள்ளாச்சி தொகுதி தற்போது திமுக வசம். அந்தக் கட்சியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் இங்கு எம்பி-யாக இருக்கிறார். பகட்டு அரசியல் செய்யாமல் அமைதி வழியில் அரசியல் செய்பவர் என்பதால் இவருக்கு எதிரான அதிருப்திகள் தொகுதிக்குள் பெரிதாக இல்லை.

டாக்டர் மகேந்திரன் மற்றும் பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம்
டாக்டர் மகேந்திரன் மற்றும் பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம்

கடந்த முறை சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சண்முகசுந்தரம் இங்கு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை தக்கவைக்க திமுக மும்முரம் காட்டி வருகிறது. அதனாலேயே பொள்ளாச்சி தொகுதியில் மீண்டும் இந்த முறை திமுகவே நேரடியாக களம் காண்கிறது.

கடந்த 1951 முதல் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக அதிகபட்சமாக 5 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் இங்கு வெற்றி பெற்றுள்ளன. மதிமுக, தமாகா கட்சிகள் தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளன.

சிட்டிங் எம்பி-யான சண்முகசுந்தரம் மீது பெரிதாக அதிருப்த் இல்லை என்றாலும், தொகுதிக்காக பெரிதாக எதையும் அவர் சாதிக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது. இதனால் இவருக்கு இம்முறை திமுக தலைமை சீட் கொடுக்காது என்றுகூட திமுக தரப்பில் பேசப்பட்டது. ஆனால், ஸ்டாலினின் குட் புக்கில் இருப்பதால் இவருக்குத்தான் இம்முறையும் சீட் என அடித்துச் சொல்கிறது இன்னொரு தரப்பு. இந்தத் தொகுதி மீது மக்கள் நீதி மய்யத்திலிருந்து திமுகவுக்கு வந்த டாக்டர் மகேந்திரனுக்கும் ஒரு கண் உண்டு.

மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி
மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர் கார்த்திக் அப்புசாமி

அதிமுக சார்பில் கடந்த 2014-ல் இங்கு வெற்றிபெற்ற மகேந்திரனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படலாம் என்கிறார்கள். ஆனால், இப்போது அவர் மடத்துக்குளம் எம்எல்ஏ-வாக இருப்பதால் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்று தெரியவில்லை. ஆனைமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரான கார்த்திக் அப்புசாமியின் பெயரும் அதிமுக வேட்பாளர் பரிசீலனையில் அடிபடுகிறது.

பாஜக தரப்பில் அண்ணாமலையே இங்கு களமிறங்கினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். அண்ணாமலையின் மனைவி உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் இந்த தகவல் பாஜகவினரிடையே வேகமாக பரவி வருகிறது. கோவை அல்லது கரூர் தொகுதியில் போட்டியிட்டால் திமுக, அதிமுகவுடன் கடுமையாக போராட வேண்டி இருக்கும் என்பதால் பொள்ளாச்சியை பரிசீலனையில் வைத்திருக்கிறார் அண்ணாமலை என்கிறார்கள். அதேபோல் நடிகை குஷ்புவின் பெயரும் பொள்ளாச்சிக்கான பாஜக வேட்பாளர் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு

பொள்ளாச்சி ரயில் நிலையத்தை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பது பொள்ளாச்சி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை. அதேபோல் வனவிலங்குகள் தாக்குதல்களால் அடிக்கடி பாதிக்கப்படும் பொள்ளாச்சி மக்கள் அதற்கான தீர்வையும் எதிர்பார்த்து நிற்கிறார்கள். தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய சூழலும் இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு சொல்லும் நம்பிக்கையான வேட்பாளர் மட்டுமே இங்கே வெற்றிமுகம் காணமுடியும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in