எல்லை மீறுகிறதா உதயநிதி புராணம்?

மு.க.ஸ்டாலினிடமிருந்து உதயநிதிக்கு மாறிய முகஸ்துதி
உதயநிதி
உதயநிதிபடம்: ஜோதி ராமலிங்கம்

“யாராவது ‘23-ம் புலிகேசி’ படத்தைப் பார்க்கவில்லை என்றால் சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ-க்கள் பேசுவதைப் பார்த்தாலே போதும். மக்களின் பிரச்சினைகளைப் பேசாமல், முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைப் புகழ்கிற சபையாக சட்டப்பேரவை இருக்கிறது” - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்திருக்கும் இந்த விமர்சனம், அரசியல் அரங்கைக் கவனிக்க வைத்திருக்கிறது. திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ-வுமான உதயநிதியைப் புகழ்ந்து பேசுவது எல்லை மீறிவிட்டதாக, சமூக ஊடகங்களிலும் விமர்சனங்களைப் பார்க்க முடிகிறது. இதற்கு என்ன காரணம்?

பொதுவாக ஒருவரைப் பற்றிய புகழுரைகள் சம்பந்தப்பட்டவருக்குக் குதூகலத்தைக் கொடுக்கும். ஆனால், சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ-க்களின் புகழுரைகளால் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் கூசிப்போனதாக திமுகவினரே சொல்கிறார்கள். அதன் வெளிப்பாடாகத்தான் தன்னைப் புகழ்ந்து பேசும் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களைக் கண்டித்து, “ஆக வேண்டிய விஷயத்தை மட்டும் பேசுங்கள்” என்று ஸ்டாலின் இரு முறை கடுகடுத்தார் என்கிறார்கள். ஸ்டாலினின் இந்தக் கண்டிப்புக்குப் பிறகு, அவரைப் புகழ்ந்து பேசுவது சற்று குறைந்தது. மாறாக, உதயநிதி ஸ்டாலின் மீதான புகழுரைகள் வேகம் பிடித்தன. அமைச்சர்கள் பலருடைய உதயநிதி புகழுரைக் காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி விமர்சனத்துக்கும் வழிவகுத்திருக்கின்றன.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்து வெளியே வரும் உதயநிதி...
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்து வெளியே வரும் உதயநிதி...படம்: ஜோதி ராமலிங்கம்

அதீதப் புகழ்ச்சிகள்

சீனியர் அமைச்சர்கள் தொடங்கி ஜூனியர் அமைச்சர்கள் வரை, உதயநிதியைப் புகழ்ந்து பேசத் தனியாக ஸ்கிரிப்ட் தயார் செய்யப்படுகிறதோ என்று எண்ணும் அளவுக்குப் புகழ்ச்சிப் பேச்சில் நெடி ஏறுகிறது. “திமுக திரையுலகில் பட்டுபோய்விடுமோ என்று எண்ணிய வேளையில் திராவிட நடிகர் கிடைத்திருக்கிறார்” என்று ‘நடிப்பிசைப் புலவர்’ ராமசாமி, எஸ்எஸ்ஆர், எம்ஜிஆர் ஆகியோரின் வரிசையில் உதயநிதியையும் வைத்து அகமகிழ்ந்து பேசியிருக்கிறார் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு. 5-வது முறையாக எம்எல்ஏ-வாக இருக்கும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “திருச்சுழி தொகுதியில் மூலை முடுக்கெல்லாம் என்னைக் கொண்டுசேர்த்தவர் உதயநிதி” என்று புகழ்பாடியிருக்கிறார்.

“கல்லைச் சுமந்து சேர நாட்டுக் கண்ணகிக்குக் கோட்டம் கட்டியது சேரன் செங்குட்டுவன் - அது சிலப்பதிகாரம். எங்கள் இளைய தளபதியே, நீ தூக்கிக் காட்டிய ஒற்றை செங்கல்லில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கழகக் கோட்டையானது.- இது செங்கலதிகாரம்” என்று பாட்டாகவே பாடிவிட்டார் பால்வளத் துறை அமைச்சர் நாசர். உதயநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 4 மாதங்களே ஆகும் நிலையில், “உதயநிதி இந்தியாவிலே சிறந்த சட்டமன்ற உறுப்பினர்” என்று நற்சான்றிதழ் தருகிறார் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. “உதயநிதி ஸ்டாலின் பெயர் உந்து சக்தியை தருகிறது” என்று டாப் கியரில் பேசியிருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. உச்சகட்டமாக, “அடுத்த அரை நூற்றாண்டுக்குத் தமிழகத்தைக் காக்கவிருக்கும் இளம் தலைவர் உதயநிதிதான்” என்று தெறிக்கவிட்டிருக்கிறார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

திமுகவுக்கே இது புதுசு!

இதெல்லாம் சில அமைச்சர்களின் பேச்சின் உதாரணங்கள்தான். இதில் திமுக எம்எல்ஏ-க்களின் புகழுரைகளைக் கேட்கவே வேண்டாம். சட்டப்பேரவைக்கு வரும் எம்எல்ஏ-க்கள் ஒவ்வொருவரும் உதயநிதி இருக்கைக்குச் சென்று வணக்கம் தெரிவிப்பது, உரை நிகழ்த்திய பிறகு பவ்யமாக அவரிடம் சென்று பேசுவது போன்றவையெல்லாம் அன்றாடக் காட்சிகளாகின. இது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இணையாக சட்டப்பேரவையில் உதயநிதிக்கு முக்கியத்துவம் கூடியிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

கருணாநிதி இருந்தபோது ஸ்டாலினையும் புகழ்ந்து பேசியிருக்கிறார்கள். ஆனால், அதெல்லாம் கட்சி தொடர்பான நிகழ்வுகளில்தான் நடந்தேறியது என்கிறார்கள் சில மூத்த உடன்பிறப்புகள். “யாராவது சட்டப்பேரவையில் ஸ்டாலினைப் புகழ்ந்து பேசினால், உடனே தலைவர் கலைஞர் தடை போட்டுவிடுவார். 2009-ல் ஸ்டாலின் துணை முதல்வரான பிறகுதான் சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ-க்கள் அவரைப் புகழ்ந்து பேசுவதைக் காண நேர்ந்தது” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த சீனியர் உடன்பிறப்பு ஒருவர்.

உதயநிதிக்கு இது அதிகம்தான்!’

கடந்த காலங்களில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா எனப் பலரும் சட்டப்பேரவையில் புகழப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் முதல்வர்களாக இருந்தவர்கள். முதல்வர் ஸ்டாலினும் அந்த வரிசையில் சேர்ந்துகொள்ளப்படுவார். சட்டப்பேரவையைப் பொறுத்தவரை, 234 எம்எல்ஏக்களைப் போல உதயநிதியும் ஒரு எம்எல்ஏ மட்டும்தான். அவரை ஏன் இவ்வளவு புகழ வேண்டும் எனும் கேள்விகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.

கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே...
கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே...படம்: ஜோதி ராமலிங்கம்

“எப்போது முதல்வர் ஸ்டாலின் தன்னைப் புகழ்ந்து பேசி நேரத்தை இங்கு வீணடிக்க வேண்டாம் என்று சொன்னாரோ, அப்போதே அவர் ‘என்னைப் புகழ வேண்டாம், என் மகனைப் புகழ வேண்டும்’ என்று சொன்னார் என்பதை திமுக எம்எல்ஏ-க்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள்” என்கிறார் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன்.

“ஒருவேளை அது தவறு என்று நினைத்திருந்தால், ஸ்டாலின் அதைத் தடுத்திருக்க வேண்டும். என்னைப் புகழ வேண்டாம் என்று ஸ்டாலின் அறிவித்ததும்கூட ஒரு நாடகம்தான். சட்டப்பேரவையில் புகழுரைகள் புதியதில்லை என்றாலும் ஒரு எம்எல்ஏ-வான உதயநிதிக்கு இது அதிகம்தான். இதையெல்லாம் மக்கள் வேடிக்கையாகத்தான் பார்ப்பார்கள். இப்படி நடப்பது முறையற்றது, தவறானது. இப்படிப் புகழ் பாடுவதையும் மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதையும் கைவிட்டு, மத்திய அரசோடு ஒத்துழைத்து, எம்எல்ஏ-க்களின் ஆலோசனைகளைக் கேட்டு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும்” என்கிறார் நாராயணன்.

பின்னணியில் கிச்சன் கேபினட்?

உதயநிதியை அரசியலில் களம் இறக்கிவிட்டதிலிருந்தே, அவரைப் புரொமோட் செய்வதற்குத் தனியாக ஒரு டீமே இயங்கிக்கொண்டிருக்கிறது. உதயநிதி தொடர்பாக சமூக ஊடகங்களில் எதையெல்லாம் பகிர்ந்தால் ஹிட்டாகும் என மூளையைக் கசக்கிப் பலரும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். சட்டப்பேரவைக்கு வெளியே மட்டுமே உதயநிதியைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள், இப்போது சட்டப்பேரவைக்குள்ளும் அதைச் செய்ய தொடங்கிவிட்டதன் பின்னணியில் கிச்சன் கேபினெட்டின் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக திமுகவை புரொமோட் செய்யும் அணியைச் சேர்ந்த ஊழியர் ஒருவரிடம் பேசினோம். “இதுபோன்ற தகவல்கள் எதுவும் உண்மையில்லை. சட்டப்பேரவையில் உதயநிதியைத் திட்டமிட்டு யாரும் புரொமோட் செய்யவில்லை. உதயநிதி தலைவரின் மகன் என்பதற்காகவும் தங்களுடைய அரசியல் எதிர்காலத்துக்காகவும் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். இது எதிர்மறையான தோற்றத்தைத் தருகிறது என்றால், அதை நாங்கள் தலைமைக்கு எடுத்துச் சொல்வோம்” என்று முடித்துகொண்டார் அந்த ஊழியர்.

விரைவில், கட்சியிலும் ஆட்சியிலும் உதயநிதிக்கு மிகப்பெரிய உயரம் காத்திருப்பதாகப் பேச்சுகள் எழத் தொடங்கி யிருக்கின்றன. அதற்கான ஒத்திகைதான் சட்டப்பேரவைப் புகழுரைகள் என்றும் சொல்லப்படுகிறது. மெய்யாலுமா?!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in