`நீங்க இரண்டு பேரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்'- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக கொந்தளிக்கும் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி

`நீங்க இரண்டு பேரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள்'- ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு எதிராக கொந்தளிக்கும் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி

ஒற்றை தலைமை கோஷம் அதிமுகவில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. ஓபிஎஸ் தனியாகவும், ஈபிஎஸ் தனியாகவும் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருவதால் கடந்த இரண்டு நாட்களாகத் தமிழக அரசியலில் அனல் கிளப்பி வருகிறது. இந்த நிலையில், கோவை முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆறுக்குட்டி, “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும் எனத் தமிழக அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அவர் நான்கு ஆண்டுகாலமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட மூன்று மாதத்திலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார். உள்ளாட்சித் தேர்தலைச் சரியான நேரத்தில் நடத்தி இருந்தால் அதிமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு தனித்தனியாகப் பேட்டி கொடுத்து வருகிறார்கள். ஏதோ விபத்தினால் இருவரும் முதல்வராக வந்துவிட்டார்கள். அவர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதால்தான் நாங்கள் ஒதுங்கி இருந்தோம். அதிமுக தோல்வியை சந்தித்திருக்கும் சங்கடமான நிலையில் இருவரும் பதவிக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஊரில் இருக்கும் நாற்பது ஐம்பது பேரை வைத்துக் கொண்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் தங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டா அவர்கள் இந்த பதவிக்கு வந்திருக்கிறார்கள். இவர்களால் அதிமுக ஜாதிக் கட்சியாக மாறிவிட்டது. இதனால் தொண்டர்கள் நொந்துபோய் கிடக்கிறார்கள். இருவரும் இருபது பேரை வைத்துக் கொண்டு கட்சியை நடத்துகிறார்கள். அதிமுகவில் பொதுச் செயலாளராகப் பதவிக்குத் தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்க இரண்டு பேரும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். தகுதியானவர்கள் பொதுச் செயலாளராக வரட்டும்.

அதிமுக இயக்கம் உடைந்து போன போது ஜெயலலிதா ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்தினார். ஆனால் தற்போது அதிமுகவில் ஒரு மேயர் கூட இல்லை. போதிய அளவு கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் இல்லை. இப்படி இருக்கக் கட்சியை எப்படிப் பலப்படுத்த முடியும்? இந்த நான்கு வருடங்களில் கட்சிக்காரர்களுக்கு என அவர்கள் எதுவும் செய்யவில்லை. ரெண்டு பேரும் மாற்றிமாற்றி போஸ்டர் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இருவருக்கும் தொண்டர்கள் மத்தியில் ஆதரவு இல்லை. கட்சி சிதைந்துவருவது வேதனை அளிக்கிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in