‘ஈபிஎஸ் தலைமையில் முன்னேறிய தமிழகம், இப்போது பின்னோக்கிச் செல்கிறது’ - ஆர்.பி.உதயகுமார் ஆதங்கம்

‘ஈபிஎஸ் தலைமையில் முன்னேறிய தமிழகம், இப்போது பின்னோக்கிச் செல்கிறது’ - ஆர்.பி.உதயகுமார் ஆதங்கம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து முன்னேறிய தமிழகம், கடந்த 19 மாத திமுக ஆட்சியில் பின்னோக்கி சென்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,  கல்லுப்பட்டி ஒன்றிய அதிமுக அம்மா பேரவை சார்பில் பிப். 23ல் 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமண விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

இதில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார், “ எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின்  பிறந்த நாள், அதிமுகவின் 51 ஆண்டு நிறுவன நாளையொட்டி, அதிமுக அம்மா பேரவை சார்பில் எனது மகள் பிரியதர்ஷினி மற்றும் ஏழை, எளிய 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணத்தை 
சட்டமன்ற எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிசாமி  நடத்தி வைக்கிறார்.

கொரோனா பேரிடருக்கு முன் 200க்கும் மேற்பட்ட.ஏழை, எளிய ஜோடிகளுக்கு  திருமணம்  நடத்தியுள்ளோம். எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதா சந்தித்த சோதனை கொஞ்சம் நஞ்சம் அல்ல. 1996ல் ஜெயலலிதா அனுபவித்த வேதனைகளை கணக்கிட முடியாது. அவர்  தாங்கி பிடித்த அதிமுக, தற்போது ஆலமரமாக உள்ளது. பயந்து ஒடியவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தை தாங்கிப் பிடிக்க முடியாது. ஏச்சு, பேச்சு, அவதூறுகளை கடந்து, இந்த இயக்கத்தை எடப்பாடியார் இன்று வழி நடத்தி வருகிறார். ஜெயலலிதா எப்பேர்பட்ட சோதனைகளை சந்தித்தாரோ, அதே போல்  சோதனைகளை எடப்பாடியார் இன்று சந்தித்து வருகிறார். இறுதியில் அவர் தான் வெற்றி பெறுவார். ஒன்னரை கோடி தொண்டர்களும் எடப்பாடியார் பின் உள்ளனர். 30 ஆண்டு அதிமுக ஆட்சி மக்களுக்கு பொற்காலமாக இருந்தது.  எடப்பாடியார் ஆட்சி காலத்தில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தார். 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தார்” என தெரிவித்தார்.

மேலும், “ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி,  முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தினார். ஆண்டுக்கு ரூ.68 ஆயிரம் கோடி அளவில் சமூக நல பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி நான்கு ஆண்டுகளில்  அனைத்து துறைகளிலும் தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்று இந்தியாவிற்கே வழிகாட்டும் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை கொண்டு வந்தார். ஆனால், இன்றைக்கு கடந்த 19 மாத கால திமுக ஆட்சியில், எத்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. எடப்பாடியார் ஆட்சியில்  கொண்டுவந்த  திட்டங்களை தான், ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ஏழை, எளியோர் பயனடைந்த  தாலிக்கு தங்கம் திட்டம்,  மாணவர்களுக்கு மடிக்கணினி, அம்மா பரிசு பெட்டகம் ஆகியவற்றிற்கு  மூடு விழா நடத்தி விட்டனர். சொத்து வரி, பால் விலை, கட்டுமான பொருட்கள் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை, மின் கட்டணம் உயர்வு தந்து தமிழகத்தை பின்னோக்கி செல்ல வைத்து விட்டனர். சட்ட ஒழுங்கு  கேள்விக்குறியாக  உள்ளது. திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை  மக்களிடம்  எடுத்துச் சொல்லி, தமிழகத்தில்  எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய அயராது பாடுபட வேண்டும். அதுவே அதிமுகவினரின்  லட்சியமாக இருக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in