முன்னாள் அமைச்சர் காமராஜ், செய்யாதுரைக்கு வலுக்கிறது சிக்கல்: ஒரே நேரத்தில் வருமானவரி, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

முன்னாள் அமைச்சர் காமராஜ், செய்யாதுரைக்கு வலுக்கிறது சிக்கல்: ஒரே  நேரத்தில் வருமானவரி, லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

சென்னை மைலாப்பூரில் உள்ள ஜி.பி.ஏ கன்சல்டன்சி அலுவலகத்தில் வருமான வரித்துறையினரும், லஞ்ச ஒழிப்பு துறையினரும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை தனது எஸ்.பி.கே நிறுவனத்தின் வாயிலாக பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி எழுந்த புகாரின் அடிப்படையில் அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்யாத்துரையின் நிறுவன கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் ஆடிட்டருக்குச் சொந்தமான மைலாப்பூரில் உள்ள ஜி.பி.ஏ கன்சல்டென்சி நிறுவன அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைக் கவனிக்கும் ஒரு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையில் இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மைலாப்பூர் ஜி.பி.ஏ கன்சல்டன்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே செய்யாதுரை வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பாக 3-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஜிபிஏ அலுவலகத்திற்கு சோதனைக்கு வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

இதன் மூலம் அரசு ஒப்பந்ததாரரான செய்யாதுரையின் நிறுவனங்களுக்கும், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் இந்த ஜி.பி.ஏ கன்சல்டன்சி நிறுவனம் தான் கணக்கு வழக்குகளைக் கவனித்து வருவது தெரியவந்துள்ளது.மேலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in