புதுச்சேரி அரசியலில் ஆளுமை மிக்க தலைவராக விளங்கிய முன்னாள் அமைச்சர் கண்ணன், நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74.
காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர், எம்பி என பதவிகள் வகித்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி இரண்டு முறை புதிய கட்சிகள் துவங்கினார். 2016ம் ஆண்டு தேர்தலின் போது அதிமுகவுக்கு சென்றார். அதன்பிறகு, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
பின்னர், பாஜகவிலிருந்து விலகியதுடன் அரசியலில் இருந்தும் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் தொற்றால் கண்ணன் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் விசாரித்தனர்.
இதுதொடர்பாக கண்ணன் மகன் விக்னேஷ் வெளியிட்ட அறிக்கையில், ’’கடந்த 1ம் தேதி ரத்த அழுத்த குறைவு மற்றும் சுவாச கோளாறு காரணமாக புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தந்தை அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். மேலும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு சுவாசத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் உயிரிழந்தார்’’ என குறிப்பிட்டுள்ளார்.