'நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டீர்கள்; மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்'- நுபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டையடி

நுபுர் ஷர்மா
நுபுர் ஷர்மா

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டில் இப்போது நடக்கும் வன்முறைகளுக்கு இவர்தான் பொறுப்பு என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

முகமது நபிகள் பற்றி ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கூறிய கருத்துக்கள் நாட்டில் பதற்றத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டிய உச்ச நீதிமன்றம், நுபுர் சர்மா முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது.

இந்த வழக்கில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், " ஒரே ஒரு தனிநபராக இருந்து கொண்டு ஒட்டுமொத்த நாட்டையே கடும் பதற்றத்தில் ஆழ்த்திவிட்டார் நுபுர் சர்மா. இவரின் வார்த்தைகளால் இன்று நாட்டையே தீக்கிரையாக்கி உள்ளார். உதய்ப்பூரில் நடந்த படுகொலை சம்பவத்துக்கு இதுபோன்ற வார்த்தைகளே காரணம். முகமது நபிகள் விவகாரத்தில் நுபுர் சர்மா நடந்துகொண்டதும் அதனைத் தொடர்ந்து அவரின் வழக்கறிஞர்கள் சொல்வதும் வெட்கக்கேடானது. அவர் முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

மேலும், "நுபுர் சர்மாவுக்கு எதிராக பல இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார். ஆனால் நாட்டில் பல கலவரங்களுக்கு காரணமான நுபுர் சர்மாவை யாரும் கைது செய்ய துணியவில்லை. நுபுர் சர்மாவின் கருத்துகள் என்பது பிடிவாதமான மற்றும் திமிர்பிடித்த தன்மையை காட்டுகின்றன. ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதால் தனக்கு அதிகாரம் இருப்பதாக அவர் நினைக்கிறார். நாட்டின் சட்டத்தை மதிக்காமல் அவரால் இது போல பேச முடியுமா" என்று நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.

நாடு முழுவதும் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பல எஃப்ஐஆர்களை டெல்லிக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றத்திடம் நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னர் அந்த மனுவை திரும்பப் பெற்றார்.

பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பது குறித்த உத்தரவை மேற்கோள் காட்டி வாதிட்ட நுபுர் சர்மாவின் தரப்புக்கு பதிலளித்த நீதிபதிகள், "தொலைக்காட்சி விவாதத்திற்குச் சென்று ​​சமூகத்தின் கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகளைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுபவரை பத்திரிகையாளர் பீடத்தில் ஏற்றிவிட முடியாது " என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in