`பாஜக மேல்மட்ட தலைவர்களின் டார்கெட் நிதியமைச்சர் தான்'- மனம் திறந்த டாக்டர் சரவணன்

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

தீவிரவாதிகளுடனான தாக்குதலில் வீர மரணமடைந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு கடந்த 13-ம் தேதி இறுதி அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது. அப்போது, அங்கிருந்த பாஜகவினருக்கும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையே நடந்த கசப்பான சம்பவங்களைத் தொடர்ந்து, நிதியமைச்சர் விமான நிலையத்திலிருந்து வெளியே காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது, அவரது கார் மீது பாஜகவினர் சிலர் காலணியை வீசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று மாலையே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன், "நிதியமைச்சர் தமிழகத்தில் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் பாஜகவினர் அறவழியில் எதிர்ப்பை பதிவு செய்வோம்" என்றார்.

இச்சூழலில், திடீரென அன்று இரவு சுமார் 12 மணி அளவில் மதுரையில் நிதியமைச்சரை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்த சரவணன் வெளியே வந்ததும், தான் பாஜகவில் இருந்து விலகப் போவதாகவும், அவர்களது மத அரசியல் எனக்கு பிடிக்கவில்லை என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கு அடுத்த நாளே சரவணனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பதவிகளில் இருந்தும் அதிரடியாக நீக்கினார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இந்நிலையில், மருத்துவர் சரவணனை அவரது மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து காமதேனுக்காக சில கேள்விகளை முன் வைத்தோம்.

பாஜகவின் சித்தாந்தம் உங்களுக்கு முன்பே தெரிந்தும் அதில் சேர்ந்தது ஏன்?

பாஜகவினர் இவ்வளவு தீவிரமான மதவெறியர்களாக இருப்பார்கள் என்பதே அதில் இணைந்து அனுபவித்தப் பிறகு தான் தெரிந்தது. அன்றாட நடக்கக்கூடிய கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் அவர்கள் பேசக்கூடிய விஷயங்கள், அவர்களது பேச்சு எதை நோக்கி செல்கிறது, அவர்கள் நமக்கு என்ன கட்டளைகள் இடுகின்றனர் என்பதையெல்லாம் பார்த்தால், நெருக்கி 50% முதல் 60% மதப் பிரச்சினையில் தான் மூக்கை நுழைப்பார்கள். அதற்காக ஆள் சேர்த்து போராட்டங்களில் ஈடுபடுங்கள் என்று தான் மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவு வரும். இது போன்ற நிகழ்வுகள் எனக்கு பாஜகவில் சேர்ந்த உடனே அதன் மீதான அவநம்பிக்கையை உருவாக்கிவிட்டது. மேலும், மதுரையில் அதிகம் இஸ்லாமியர்கள் வாழக்கூடிய கோரிப்பாளையத்திற்கு வாக்கு கேட்பதற்காக சென்றபோது, அப்பகுதியில் எங்களை வாக்கு சேகரிக்கவிடாமல் தடுத்தனர். அச்சமயமே ஒரு தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று மனதிற்குள் லேசான துணுக்கு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி, என்னிடம் சிகிச்சை பெறக்கூடிய இஸ்லாமியர்கள் கூட, "வாக்களிப்பது என்று வரும்போது தாமரைக்கு கை வராதே" என்கின்றனர். சமீபத்தில் கூட தேசியக்கொடியை வழங்குவதற்காக சில இடங்களுக்குச் சென்றோம். அப்போது பாஜக கொடியைப் பார்த்ததும் எங்களை திட்டினார்கள். இப்படியாக போகப் போகத் தான் தெரிந்தது பாஜக மக்களிடம் ஆதரவு இல்லாத கட்சி என்று. இந்துத்துவத்தை ஆதரிக்கும் கட்சி என்பது முன்பே தெரிந்தாலும், மக்களால் வெறுக்கக்கூடிய, நம்மால் பயணிக்க இயலாத ஒரு கட்சி என்பதை உள்ளே வந்து அனுபவித்தப் பிறகு தான் தெரிந்துகொண்டேன்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் சீட்டு கொடுக்காததால் தான் பாஜகவிற்கு சென்றீர்களா?

ஒரு மனக்குமுறல் தான். இரண்டு இடைத்தேர்தல்களை சந்தித்து இருக்கின்றோம். அம்மையார் ஜெயலலிதாவின் மரணம் குறித்த வழக்குகள் தொடுத்தோம். இவ்வளவு செய்த நிலையில், நமக்கு சீட்டு கிடைத்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது கிடைக்கவில்லை. அப்போது, ஏற்பட்ட மனஉளைச்சலால் தான், முடிவு செய்து பாஜகவில் இணைந்தேன். அப்போது, நான் எடுத்த முடிவு தவறானது தான்.

அண்ணாமலையின் செயல்பாடுகள் எப்படி உள்ளது? அவர் கட்சியை எவ்வாறு வழி நடத்துகிறார்?

அவர் நல்ல காவல் அதிகாரியாக இருந்தவர். நடிகர் ரஜினியை நம்பி அரசியலுக்கு வந்தார். ஆனால், அவர் கட்சி ஆரம்பிக்காததால் பாஜகவில் இணைந்தார். புதிதாக கட்சியில் இணைந்தால் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஆர்வம் தான் அவருக்கு உள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு பேட்டிகளை அவர் அளித்தாலும், அவை ஒரு நாள் மட்டுமே பேசப்படுகிறது. மேலும், அவர் திறம்பட பணியாற்றுவது போல் எனக்கு தெரியவில்லை. பாஜகவின் வளர்ச்சி என்பது ஆமை வேகத்தில் தான் உள்ளது.

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பதை ஏற்கிறீர்களா?

ஆம், உறுதியாக அது சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி தான். கட்சி ஆலோசனைக் கூட்டங்களில், அவர்கள் பேசக் கூடியதைப் பார்க்கும்போது அது சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி தான் என்பது தெளிவாகிறது.

பாஜகவில் இருக்கக்கூடிய சாதி அரசியலின் வீரியம் குறித்து?

நிச்சயமாக, பாஜகவிலும் சாதி, மத அரசியல் உள்ளது. அங்கு வாக்கு வங்கிக்காக அரசியல் லாப நோக்கத்தோடு ஒவ்வொரு செயலும் செய்யப்படுகிறது. பாஜக, சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி இல்லை என்பதை நிரூபிப்பதற்காக சிறுபான்மையினருக்கு பொறுப்பு வழங்குகின்றனர். பார்ப்பன கட்சி கிடையாது என்பதை காட்டுவதற்காக பெயரளவில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவத்தை அளிக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி எப்படி உள்ளது? ஆட்சி நன்றாக இருந்தும் பாஜகவில் இருந்ததால் விமர்சிக்க நேர்ந்ததா?

நான் எட்டு பத்து வருடமாக திமுகவில் இருந்தவன். தலைவர் (மு.க.ஸ்டாலின்) அனுமதி கொடுத்து இரண்டு தேர்தல்களை சந்தித்து எம்எல்ஏவாகவும் இருந்தேன். தற்போது, அவரது ஆட்சியில் மக்கள் பணிகள் அனைத்தும் நன்றாக நடைபெற்று வருகிறது. He is doing a very good job. ஏற்கெனவே, இருந்த அரசாங்கம் மிகப்பெரிய நிதிப்பற்றாக்குறையை ஏற்படுத்தியதால். அதனை, தற்போது நிதியமைச்சர் சரி செய்து வருகிறார். செஸ் ஒலிம்பியாட் நிறைவுப் போட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்திருந்தார். இது அரசியல் நாகரிகத்தின் உச்சம். எப்படி நிதியமைச்சருக்கு எதிராக பேட்டி கொடுக்க சொன்னார்களோ அதுபோல, பாஜகவில் இருந்ததால் மைக்கைப் பிடித்து திமுக ஆட்சி குறித்து குறை கூறினேன்.

திமுகவில் உங்களை சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் வேறு ஏதேனும் கட்சியில் சேரும் எண்ணம் உள்ளதா?

வேறு கட்சிகளில் சேர்வதற்கான எண்ணம் இல்லை. மருத்துவராக இருந்து வருகிறேன். ஏற்கெனவே, திராவிட கட்சிகளில் இருந்ததால் அது சார்ந்த பற்று தான் தற்போதும் இருக்கிறது.

அடிக்கடி கட்சி தாவுகிறவர் என்ற அவப்பெயர் உங்கள் மீது எழுந்துள்ளதே?

என்னுடைய மன உணர்வு தான் அது. எப்போதெல்லாம் எனது மனம் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் நான் கட்சியிலிருந்து மாறுகிறேன். இதனால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லையே. ஏற்கெனவே, நான் பாஜகவில் அதிருப்தியுடன் பயணித்து வந்தேன். உச்சகட்டமாக இப்படி ஒரு நிகழ்வு (காலணி வீசிய நிகழ்வு) நடைபெற்றது. அதில் தேவையில்லாமல் நானும் ஒரு பலிகடாவாக ஆகிவிடுவோம் என்ற நிலை எழுந்தது. அதனால், நான் கட்சியிலிருந்து வெளியே வந்தேன். இதுபோன்று ஒவ்வொரு கட்சியில் இருந்தும் நான் வெளியே வந்ததற்கு எனக்கான நியாயம் உள்ளது. யூடியூப் கமெண்ட்களை பார்த்து என் வாழ்க்கையில் பயணிக்க முடியாது.

விமான நிலைய சம்பவம் தான் நீங்கள் கட்சியில் இருந்து வெளியே வர முழுமுதல் காரணமாக இருந்ததா?

இல்லை. ஆறு ஏழு மாதங்களாகவே அந்த எண்ணம் இருந்தது. என்றவரிடம் குறுக்கிட்டோம், சில மாதங்களுக்கு முன்பு கூட நான் கட்சி மாறப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டீர்களே? என்றதற்கு, ஆம். பாஜகவில் அழைத்து சமரசம் பேசினார்கள். நியாயமாக உங்களுக்கு மாநிலத் துணைத்தலைவர் பதவி கொடுக்க வேண்டும். இருந்தாலும், தற்போதைய சூழலுக்கு நீங்கள் 50 ஆயிரம் வாக்குகளை வாங்குவீர்கள். இருந்தாலும் ஜெயிப்பதற்கு தேவையான 20 ஆயிரம் வாக்குகள் வாங்கி மாவட்டத் தலைவர் பதவியை எடுத்துக்கொண்டு கட்சியை வளர்த்து தாருங்கள் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வேலை பார்த்தேன்.

நிதியமைச்சர் இந்துத்துவத்தையும், பாஜகவையும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அவர் காரின் மீது காலணி வீசப்பட்ட நிகழ்வு ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்வு தானா?

இருக்கக்கூடும். ஏனென்றால் பாஜகவில் நான் இருந்தபோது மேல்மட்டத்தில் பேசக்கூடிய அனைவரது டார்கெட்டும் நிதியமைச்சராகத் தான் இருந்தது. அவர் ஒரு மெத்தப் படித்தவர். எக்கனாமிஸ்ட், மக்களுக்கு அதிகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்‌. எனவே, அவரை (நிதியமைச்சர்) அவர்களது டார்கெட்டாக வைத்துள்ளனர். ஏதோ ஒரு வகையில் அவரை மட்டம்தட்ட வேண்டும் என்பதுதான் அவர்கள் திட்டம். அந்த முனைப்போடு தான் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனவே, நிச்சயமாக நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விஷயம் அவர் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நடைபெற்றது. அன்றைய தினம் மாநில தலைவர் அண்ணாமலை கூட மதுரைக்கு வந்திருந்தார். பத்திரிகையாளர்களை சந்தித்து நடந்த விஷயத்திற்கு அண்ணாமலை மன்னிப்புத் தெரிவித்து இருந்தால், இந்த விவகாரம் இவ்வளவு பெரிதாக ஆகி இருக்காது.

இறுதியாக, "பாஜகவில் நான் பயணித்ததால் கூறுகிறேன், அவர்களது சித்தாந்தம் தமிழகத்திற்கு செட்டாகாதது ஒன்று. 'முட்டை போடும் கோழிக்கு தானே அதன் வலி புரியும்' பாஜகவில் இருந்து அனுபவித்தவர்களுக்கு தெரியும். மாற்றுக்கட்சியில் இருந்து வந்த கிட்டத்தட்ட 30-40 சதவீதத்தினர் அந்த வலியுடன் தான் பாஜகவில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். நான் பாஜகவில் சேர்ந்த புதிதில் முன்னாள் மாவட்ட தலைவரை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்காக சென்றேன். அப்போது, அந்த முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு கூட அவர் யார் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு பாஜக, செல்வாக்கு இல்லாத ஒரு கட்சி. இப்போதும், நான் வெளியே செல்லக்கூடிய இடங்களில் அண்ணாமலை என்றால் அவர் யார் என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு தான் இந்த கட்சி உள்ளது" என்று முடித்துக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in