
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கடந்த 15-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான கொரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதி அடைந்ததாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துவிட்டார் என்றும் ஐசியூவில் வைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதய பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறார் என்றும் இதய பாதிப்புக்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.