
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.
அவருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாழ்த்து பெற்றார். இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனாவில் இருந்து அவர் மீண்டு விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். " நான் நல்லா இருக்கேன். சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன்" என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர்.