
எதிரணி குழப்பத்தில் இருப்பதால் வேட்பாளரை இன்னும் தேர்வு செய்யவில்லை என்றும் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கேட்பேன் என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் ஆதரவு கோரினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரைக்கு வருமாறு முதலமைச்சரை சந்தித்து அழைப்பு விடுத்தேன்.
முதலமைச்சர் மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை எங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். எதிரணியில் உள்ள அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். அதனால் தான் அவர்களால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை.
நடிகர் கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவரையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன். அதைபோல கூட்டணி கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்போம்'' என தெரிவித்தார்.