ஹோலி நெருப்பில் ஹரீஷையும் போட்டு எரிக்க வேண்டும்: ஹரீஷே சொல்கிறார்!

உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்
உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்

ஏற்கெனவே உத்தராகண்ட் தேர்தல் தோல்வியால் உழன்றுகொண்டிருக்கும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், தற்போது தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் முறைகேட்டுப் புகார்களால் வேதனையின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் காங்கிரஸ் தலைமை தன்னை வெளியேற்றட்டும் என்று சுயவிமர்சனத்துடன் அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

சமீபத்தில் நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கரைசேரும் என ஓரளவுக்கேனும் எதிர்பார்க்கப்பட்ட மாநிலம் உத்தராகண்ட். எனினும், 70 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில் 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸால் வெல்ல முடிந்தது. பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் உத்தராகண்ட் தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்த ஹரீஷ் ராவத், தான் போட்டியிட்ட லால்குவா தொகுதியில் பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஷ்ட்டிடம் 17,527 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார்.

இதையடுத்து கழிவிரக்கம் கொண்ட ஹரீஷ் ராவத், கட்சித் தலைவர் சோனியா காந்தியை எப்படி சந்திப்பது எனப் புலம்பித் தள்ளினார். நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்குக் கலந்துகொள்ளச் செல்வதற்கு முன்னர் எழுதியிருந்த ஃபேஸ்புக் பதிவில், “சோனியா எந்த அளவுக்கு என்னை நம்பினார்! கட்சியின் மற்ற தலைவர்களும் என்னை மிகவும் நம்பினார்கள். காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவந்துவிடுவேன் என அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். எனது பங்களிப்பில் ஏதோ குறை இருந்திருக்கிறது. அதனால்தான் அவர்களது எதிர்பார்ப்பை என்னால் பூர்த்திசெய்ய முடியவில்லை” என்று தனது மனவேதனையைப் பதிவுசெய்திருந்தார்.

இது போதாதென அவர் தேர்தல் பணிகளில் முறைகேடு செய்ததாக எழுந்திருக்கும் புகார்கள் அவரை மேலும் நோகச் செய்திருக்கின்றன. தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு சீட் ஒதுக்கியதாகவும், காங்கிரஸ் ஆட்சியமைந்தால் அமைச்சர் பொறுப்புக்கு இவ்வளவு தொகை வேண்டும் எனக் கேட்டு பணம் வசூலித்ததாகவும் அவர் மீது புகார்கள் எழுந்திருக்கின்றன.

இதுதொடர்பாக, ஹரீஷ் ராவத் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “ஒரு முதல்வராக, கட்சியின் மாநிலத் தலைவராக, பொதுச் செயலாளராக, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இருந்த ஒருவர் மீது இப்படியான புகார்கள் எழுவது மிகவும் மோசமானது. எனவே, இந்தப் புகார்களின் அடிப்படையில் கட்சி என்னை வெளியேற்ற வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று மன்றாடியிருக்கிறார். கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் சிலர் இந்தப் புகாரை எழுப்பியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

கூடவே, ஹோலி பண்டிகையை ஒட்டி ஹோலிகா தஹன் எனும் பெயரில் தீமூட்டி எரிக்கும் சடங்கில், ஹரீஷ் ராவத் போன்ற தீமைகளையும் சேர்த்து எரிக்க வேண்டும் என்றும் உச்சபட்ச விரக்தியில் எழுதியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in