
"எடப்பாடி பழனிசாமியுடன், ஓ.பன்னீர்செல்வம் இணைந்துவிட்டாலும் அமமுக தனித்து இயங்கும்" என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஓபிஎஸ் எனது பழைய நண்பர். அவர் பிரிந்து சென்றதால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பழைய நண்பருடன் மீண்டும் இணைவது இயல்பான ஒன்றுதான். மேலும் ஓபிஎஸ் தனி இயக்கம், அமமுக தனி இயக்கம், இருவரும் ஒன்று சேர்ந்து அரசியல் களத்தில் செயல்படுவோம் என்றுதான் கூறினோம். அவர் கட்சி சம்மந்தமான செயல்பாடுகள், தனித்து முடிவெடுப்பது ஏற்புடையதுதான்.
இருவரும் கலந்து பேசுவது வேறு, ஒரே முடிவை எடுப்பது என்பது வேறு. எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி செல்வதை எங்கள் கட்சி நிர்வாகிகள் 90 சதவிகிதத்திற்கு மேல் விருப்பம் இல்லாமல் இருக்கின்றனர். ஒருவேளை பன்னீர்செல்வம் அந்த முடிவை எடுத்தால் கூட நாங்கள் அந்த முடிவை எடுக்கமாட்டோம். நண்பர்களாக தனித்து தனித்து இருப்போம் என்றார்.
பாஜக - அமமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றார் டி.டி.வி.தினகரன்.