‘திமுகவுக்கு தாவுகிறேனா?’ -ஈரோடு கிழக்கு தேமுதிக வேட்பாளர் விளக்கம்!

ஆனந்த்
ஆனந்த்

ஈரோடு கிழக்கு தேமுதிக வேட்பாளரான ஆனந்த், தான் கட்சி மாறப்போவதாக வெளியான தகவல்களை மறுத்திருக்கிறார்.

இடைத்தேர்தல் அறிவிப்பாகி உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் சார்பில் மாவட்ட செயலர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக சார்பிலான வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். கடந்த 2016 சட்டப்பேரவை தேர்ததில் ஈரோடு கிழக்கு தொகுதியை, தனது கூட்டணி கட்சியான அமமுகவுக்கு வழங்கியது தேமுதிக. அந்த தேர்தலில் அமமுக வேட்பாளர் டெபாசிட் இழந்தார்; அதிமுகவின் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு தொகுதியின் 2011 தேர்தல் வெற்றியை மீட்கும் நோக்கில், இம்முறை தேமுதிக தனித்து களம் காண்கிறது.

தனித்துப் போட்டி என அறிவித்ததோடு தேர்தல் பணிக்குழுக்களை நியமித்தும், தேமுதிகவினர் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையே தேமுதிக வேட்பாளர் ஆனந்த், திமுகவுக்கு தாவப்போவதாக சில தினங்களாக தகவல்கள் வட்டமடிக்கத் தொடங்கின. அவற்றால் அரண்டுபோன ஆனந்த் வெளிப்படையாக விளக்கம் ஒன்றையும் தந்திருக்கிறார்.

அதில், ‘தேமுதிகவின் வெற்றி வாய்ப்பை கெடுக்கும் நோக்கோடு சிலர் விஷமத் தகவல்களை பரப்பி வருகின்றனர். கட்சி வேட்பாளராகிய என் மீதும், கட்சியின் மீதும் அவப்பெயர் சுமத்துவதன் மூலம் அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார்கள். நான் தேமுதிகவிலிருந்து விலகி வேறு கட்சிகளுக்கு செல்லப்போவதாக பரவும் தகவல்கள் அத்தனையும் பொய்யானவை’ என ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in