ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மனைவி போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மனைவி போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மனைவி போட்டியிடுவார் என  தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் கடந்த 4-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்படுவதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். இதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

இந்தநிலையில், வேட்பாளராக யாரை காங்கிரஸ் தலைமை அறிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே எழுந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மனைவி வரலட்சுமி இளங்கோவன், மகன் சஞ்சய் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோல காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவராக உள்ள ராஜனுக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் இளங்கோவன் கடந்த 2005-ம் ஆண்டு முதல் கட்சியின் இளைஞர் காங்கிரஸில் உள்ளார். யார் வேட்பாளர் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்று கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in