ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற தேர்தல் அலுவலர் கடிதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற தேர்தல் அலுவலர் கடிதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றி அமைக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்து 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, கரோனா பரவல் இருந்ததால் வாக்குப்பதிவின்போது பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் இடைவெளி விட்டு வாக்காளர்களை நிறுத்த ஏற்பாடு, கிருமிநாசினி, கையுறை போன்றவை வழங்கப்பட்டன. கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றவர்கள் வாக்களிக்க மாலை 6 மணி முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது. மேலும், ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் இருந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தற்போது கரோனா பரவல் இல்லாத காரணத்தால், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்தலின் போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் 350 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 238 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக, 1,400 வாக்காளர்கள் வரை வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். அதேபோல், இடைத்தேர்தலின் போது, கரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல், காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் வாக்குப் பதிவு செய்யும் வகையில் நேரத்தை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மாவட்ட தேர்தல் அலுவலர் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கையை பரிசீலித்து, வாக்குப்பதிவு நேரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in