ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களமிறங்குவார் என்று தெரிகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் ஈ.வே.ரா திருமகன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டப்பேரவை செயலாளர் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ம் தேதி மனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்த பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்பப் பெற பிப்ரவரி 10-ம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனிடையே, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தத் தொகுதியில் அதிமுக களம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் பிரிந்திருக்கும் நிலையில் இரட்டை இல்லை சின்னம் அதிமுகவுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். மேலும் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.