`இது ஒரு அவமானம், பேசாமல் இருப்பதே நல்லது'- அன்புமணி ஆதங்கம்

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்`இது ஒரு அவமானம், பேசாமல் இருப்பதே நல்லது'- அன்புமணி ஆதங்கம்

''ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழ்நாட்டுக்கு இது ஒரு அவமானம். அதுகுறித்து பேசாமல் இருப்பதே நல்லது. இடைத்தேர்தலில் வெற்றிபெறவில்லை. அதை வாங்கியுள்ளார்கள்’’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த சங்கராபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு மாணவ- மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், ‘’என்எல்சி விவகாரத்தில் தமிழக அரசு, தமிழக முதலமைச்சர் இரட்டை வேடம் போடக்கூடாது. ஒரு பக்கம் விவசாயத்திற்கு தனி பட்ஜெட், மற்றொரு பக்கம் விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது தமிழக அரசு.

என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் முடிவு எடுக்கவில்லை என்றால் வரும் 21-ம் தேதி சட்டமன்றத்தில் விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது அனைத்து விவசாய சங்கங்களுடன் இணைந்து  பாமக சார்பில் சட்டமன்ற முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும்.

தமிழக வேளாண்மைத்துறை  அமைச்சர் காவல்துறையை ஏவிவிட்டு விவசாயிகளை அச்சுறுத்தி, என்எல்சி நிறுவனத்திற்கு ஆதரவாக நில கையகப்படுத்தும் பணியை கைவிட வேண்டும்.

வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சில வாட்ஸ்அப் தளங்களில் பொய்யான தகவல் பரவி வருகிறது. பொய்யான வதந்திகளை பரப்பாதீர்கள், நானும் விசாரித்தேன் அதுபோன்று சம்பவம் நடைபெறவில்லை. வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டு 115 நாட்கள் ஆகிறது. 115 நாட்களில் 16 பேர் இறந்துள்ளார். இதற்கு ஆளுநர் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழ்நாட்டுக்கு இது ஒரு அவமானம் அதுகுறித்து பேசாமல் இருப்பதே நல்லது. தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. இடைத்தேர்தலில் வெற்றிபெறவில்லை, அதை வாங்கியுள்ளார்கள்’’ என கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in