
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் அணி சார்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியும், அமமுகவும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதே நேரத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓபிஎஸ் அணியும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வந்தது. அதே நேரத்தில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்று தெரியாத நிலை இருந்து வந்த நிலையில் இன்று வேட்பாளரை அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக சார்பில் வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவார் என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ், பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் தமது தரப்பு வேட்பாளர் வாபஸ் வாங்கி விடுவோம் என்றும் இந்திய தேர்தல் ஆணைய ஆவணப்படி இன்று வரை நான் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன் என்றும் இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு எக்காலத்திலும் தடையாக இருக்க மாட்டேன் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "பாஜக நிலைப்பாட்டை அறிந்து கொள்வதில் அவசரம் காட்ட வேண்டாம். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனதற்கு நான் காரணம் இல்லை. சின்னத்துக்கான படிவத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கையெழுத்து கேட்டால் போட்டுத் தர தயார். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தனிச் சின்னத்திலும் எங்கள் வேட்பாளர் போட்டியிடுவார். எங்கள் வேட்பாளர் செந்தில் முருகன், தீவிர விசுவாசி. வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது" என்றார் ஓபிஎஸ்.