
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பிற கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்தவகையில் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் திருமாவளவனை சந்தித்து ஆதரவு கோரினார். அதனைத் தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் ஆதரவை கேட்டு உள்ளோம். அதோ மட்டுமல்ல திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள் வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம் நிச்சயம் அவர் வருவார் என நம்புகிறோம்.
கைக்கு ஆதரவாக அவர் வாக்குச்சேகரிப்பு வருவார் என நாங்கள் நினைக்கிறோம். கொள்கை ரீதியான எங்களுடன் இசைந்து வருபவர்களை நாங்கள் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். மதம் சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர் கமல்ஹாசன். அதனால் அவர் எங்களை ஆதரிப்பார். அதிமுக நாலாக உடைந்துள்ளது. அந்த நான்கு பேரும் இணைந்து பாஜகவை நிறுத்துவார்கள். அதனை நான் வரவேற்கிறேன்'' என்றார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், செயற்குழு கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்வோம். எங்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, நன்மை தீமை ஆராய்ந்து முடிவை விரைவில் அறிவிப்போம் என அவர் தெரிவித்தார்.