ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பு: திமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த விநாயகமூர்த்தி.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த விநாயகமூர்த்தி.ஈரோடு இடைத்தேர்தல் பரபரப்பு: திமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஈரோட்டைச் சேர்ந்த பாஜக மாநில நிர்வாகி விநாயகமூர்த்தி திமுகவில் இணைந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் பிப். 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஈரோடு அதிமுக முக்கியப் புள்ளிகளை திமுகவில் இணைக்க மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், பாஜகவின் மாநில நிர்வாகி திமுகவில் இணைந்துள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாஜகவின் பட்டியலின மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி தலைமையில் ஈரோடு மாவட்ட பாஜக இளைஞர் அணிச் செயலாளர் வி.வெங்கடேஷ், மதுரைவீரன் மக்கள் இளைஞர் அணிச் செயலாளர் பழ.வீரக்குமார் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இதுதொடர்பாக என்.விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் பாஜக பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளராக பணியாற்றி வநதேன். தற்போது, தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்றுகிற தலைவராக, முதல்வர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அவர் தலைமையின்கீழ் பணியாற்றவும், கலைஞர் முதல்வராக இருந்து எங்கள் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு 2009-ம் ஆண்டு வழங்கியதால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள். அத்துடன், அரசுப் பணியிலும் பணியாற்றி வருகிறார்கள்.

நான், மதுரை வீரன் மக்கள் கட்சியை நடத்தி வருகிறேன். அதில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினராக உள்ளனர். அவர்களையும் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைத்து பணியாற்றுவதற்கும், இணைப்பு விழா நடத்துவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் அத்தனை பேரையும், நடைபெற உள்ள இடைத் தேர்தலில், முதல்வர் ஆசிபெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு வாக்களிப்பார்கள். இத்தொகுதி முழுவதும் முழுவீச்சுடன், தீவிரக் களப்பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற வைத்து, திமுக தலைவர் கரத்தில் ஒப்படைப்பேன் என்று இந்நேரத்தில் உறுதி கூறுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணைப்பு நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உள்பட பலர் உடனிருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in