ஈரோடு இடைத்தேர்தல்: ஈபிஎஸ் ஆதரவு வேட்பாளருக்கு 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு

டெல்லி சென்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்.
டெல்லி சென்ற அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்.ஈரோடு இடைத்தேர்தல்: ஈபிஎஸ் ஆதரவு வேட்பாளருக்கு 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈபிஎஸ் தரப்பு அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தற்கான படிவத்தை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று சமர்பித்தார்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டியில் கட்சி இருகூறுகளாக பிரிந்துள்ளது. இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தை உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரைத் தேர்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அதிமுகவுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு 7-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதற்குள் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கடிதம் பெற்றுவிட அதிமுக வியூகம் வகுத்தது.

அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை சார்பில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸை முறைப்படி பூர்த்தி செய்து நேற்று இரவு 7 மணிக்குள் ஒப்படைக்குமாறு, கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவுறுத்தியிருந்தார்.

இந்தப் படிவத்தை ஓ.பன்னீர் செல்வத்திற்கும், அவரது ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தமிழ்மகன் உசேன் நேற்று அனுப்பிவைத்தார். இதன் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனுத்தாக்கல் செய்த செந்தில் முருகன் தனது வேட்புமனு திரும்பப் பெறுவார் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக தென்னரசு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான படிவத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று நேரில் சமர்பித்தார்.

இதில், எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுக்கு 2501 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள உறுப்பினர்களில் 2665 பேரில் தென்னரசுக்கு எதிராக ஒரு படிவம் கூட அவைத்தலைவரிடம் சமர்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதில், மறைந்த பொதுக்குழு உறுப்பினர்கள் 15 பேர், பதவி காலாவதியான உறுப்பினர்கள் 2 பேர், மாற்றுக்கட்சிக்குச் சென்ற உறுப்பினர்கள் 2 பேர், படிவங்களைப் பெற்று அனுப்பாத உறுப்பினர்கள் 17 பேர் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in