சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவம்... உள்ளாட்சித் தேர்தலில் உதாசீனம்!

தமிழகப் பிரதானக் கட்சிகளின் தாரக மந்திரம்
அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை
அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை

சட்டப்பேரவைத் தேர்தலின்போது, வெறும் லெட்டர்பேடை மட்டுமே முதலீடாக வைத்து கட்சி நடத்தும் தலைவர்களைக்கூட வலிய அழைத்துவந்து உட்காரவைத்து, பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தொகுதியையாவது கையில் கொடுத்து, தங்கள் கட்சிக்கு ஆதரவு என்று ஒப்பந்தம் செய்துகொள்வது பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவின் வாடிக்கை.

அந்தக் கட்சியின் சொற்ப வாக்குகளும் தங்களுக்கு அவ்வளவு முக்கியம் என்று இரு கட்சிகளும் மிகக் கவனமாக இருக்கும். அதுவே உள்ளாட்சித் தேர்தல் என்று என்று வந்துவிட்டால், தங்கள் கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சிகளையேகூட இரு கட்சிகளும் உதாசீனப்படுத்திவிடுகின்றன. இடப் பங்கீட்டில் உதாசீனம் என்பது ஒருபக்கம் என்றால், பேச்சுவார்த்தையின்போதே பெரிய கட்சிகளின் நிர்வாகிகள் சிறிய கட்சிகளை எவ்வளவு மோசமாக நடத்துவார்கள் என்பதை இப்போது கண்கூடாகப் பார்க்க முடிகிறது என்கிறது தமிழக அரசியல் வட்டாரம். அதற்குச் சில உதாரணங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

அதங்கத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள்

கடலூர் மாவட்டத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திமுக மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தைச் சந்திக்கச் சென்றிருந்தனர். அப்போது அவர் மட்டும் அமர்ந்துகொண்டு அவர்களை நிற்கவைத்துப் பேசியது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைக் கிளப்பியது.

அதேபோல கரூரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை திமுகவினர் உரிய மரியாதை அளிக்காமல் வெளியே போகச் சொன்னதால், அவர் கோபத்துடன் எழுந்துவந்து “நான் ஒன்றும் விருந்துக்கு வரவில்லை” என்று கொந்தளித்ததையும் நாடே பார்த்தது. இதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டையில் பேச்சுவார்த்தைக்குச் சென்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகி, ‘’பேச்சுவார்த்தைக்குச் சென்றால் ஏதோ எதிரியைப் பார்ப்பதுபோல பார்க்கிறார்கள்” என்று வேதனைப்பட்டார். இதுதான் இன்றைக்கு கூட்டணிக் கட்சியினரை திமுகவினர் நடத்தும் விதம் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி, கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “7 மாவட்டங்களில் உடன்பாடு முடிந்துவிட்டது, மற்ற இடங்களில் முடிந்துவிடும்’’ என்று மையமாகத்தான் சொல்ல முடிந்தது துரை வையாபுரியால்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “பேரூராட்சி மற்றும் நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளில் விடுதலை சிறுத்தைகளுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்” என்றும், தங்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத்தான் தெரிவித்தார்.

துரை வையாபுரி
துரை வையாபுரி

மறைமுக நிலைப்பாடு

கொடுங்கள் என்று கோரிக்கை வைக்கத்தான் முடிகிறதே தவிர, இத்தனை இடங்கள் வேண்டும் என்று அக்கட்சிகளால் வலியுறுத்த முடியவில்லை. திமுக எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள். மொத்தம் உள்ள இடங்களில் 12 சதவீதம் அளவுக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கினால் போதும் என்பதே, திமுகவின் மறைமுக நிலைப்பாடு. அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அதை அப்படியே பின்பற்ற முனையும்போது பிரச்சினைகள் எழுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் அங்கு செல்வாக்காக இருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், தங்களுக்கு அதிக இடங்களைத் தருமாறு கேட்கும்போது முரண்பாடுகள் எழுகின்றன.

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் காங்கிரஸுக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 இடங்களில் 4 இடங்கள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் இறுதிநாள்வரை பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே இருந்தது.

ஜோதிமணி எம்பி
ஜோதிமணி எம்பி

கரூரில் தங்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கக்கோரி ஆவேசப்பட்ட ஜோதிமணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய காங்கிரஸ் பிரமுகர்கள், ஜோதிமணியைக் கண்டித்து அறிக்கை விட்டனர். திமுக கொடுப்பதையும் அவர் கெடுத்துவிடுவாரோ என்ற பயம்தான் அதற்குக் காரணம்.

மறுபுறம், “உரிய இடங்களை திமுக வழங்க மறுப்பதால், நெல்லை மாவட்டத்தில் தனித்தே போட்டியிட்டுக் கொள்கிறோம்” என்று காங்கிரஸ் தரப்பில் அறிவித்தார்கள். இப்படி திமுக தரப்பு காட்டிவரும் கறாரால் பல மாவட்டங்களிலும் தாங்கள் கேட்ட எண்ணிக்கையிலான இடங்களில் தனித்துப் போட்டியிடப்போவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னிச்சையாக அறிவித்ததுடன் வேட்புமனுத் தாக்கலும் செய்துள்ளனர். இதனால் டெல்லி மேலிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டவர்களை அனுப்பிவைத்து சுமூகநிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இடம் ஒதுக்கப்படாத நிலையில், அக்கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எம்சி கார்த்திக் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

திமுக கூட்டணிக் கட்சிகள்
திமுக கூட்டணிக் கட்சிகள்

அலட்சியம் செய்த அதிமுக

திமுக கூட்டணியில் நிலைமை இப்படி ரணகளமாயிருக்க, அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவும், போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி கூட்டணியில் இருந்தே வெளியேறியிருக்கிறது. இத்தனைக்கும் அந்தக் கூட்டணியில் இவ்வளவு அழுத்தங்கள், பிரச்சினைகள் இல்லை. காரணம் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே அக்கூட்டணியில் இருந்து விலகிவிட்ட நிலையில் பாமகவும், பாஜகவும் மட்டும் அக்கூட்டணியில் நீடித்தன. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் பாமகவும் வெளியேறிவிட்ட நிலையில், தன்னுடைய ஒரே கூட்டணித் தோழனான பாஜகவுக்கு மட்டுமே இடப்பங்கீடு செய்ய வேண்டிய நிலையில் அதிமுக இருந்தது. ஆனால், பாஜக முன்வைத்த இடப்பகிர்வு யோசனைகளை அதிமுகவால் ஏற்க முடியாததால் தற்காலிமாக அதாவது இடைக்கால ஏற்பாடாக பாஜக வெளியே சென்றிருக்கிறது.

பாஜக போனால் போதும் என்ற முடிவுக்கு அதிமுக வந்ததற்குக் காரணம், 3 மேயர் இடங்கள் மற்றும் ஒவ்வொரு நகராட்சி, மாநகராட்சியிலும் தலா 30 சதவீத இடங்களை பாஜக கேட்டதுதானாம். கோவை, திருப்பூர், நெல்லை, குமரி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும், சென்னையிலும் 50 சதவீத இடங்கள் வேண்டும் என்று பாஜக கேட்டதாம். ஆனால் மாவட்டத்துக்கு 5 சதவீத இடங்கள் தருகிறோம் என்றது அதிமுக. இருதரப்புக்கும் ஏற்க மனமில்லாததால் இடைக்கால ஏற்பாடு முடிவாகியிருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லை’ என்பதை வெளிப்படையாக அறிவித்திருந்தாலும் அதிமுகமீது இருக்கிற தங்கள் பிடியை விட்டுவிட, பாஜக இப்போதும்கூட தயாராக இல்லை என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்தி இருக்கிறார். தேசிய அளவில் பாஜக கூட்டணியில் அதிமுக இருப்பதாகவும் 2024 மக்களவை தேர்தலின்போது அதிமுகவுடன்தான் கூட்டணி என்றும் உறுதியாக அறிவித்தன் மூலம், அதிமுகவை இறுகப் பிடித்துக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை. “பாஜகவுடனான கூட்டணி தொடரும், உள்ளாட்சித் தேர்தலில் 2 கட்சிகளின் சார்பிலும் அதிக இடங்களில் நிற்க வேண்டியிருப்பதால்தான் தனியாகப் போட்டி” என்று அதையே எடப்பாடி பழனிசாமியும் பின்பாட்டாகப் பாடியிருக்கிறார். மீதமிருக்கும் சிறிய கட்சிகள் சிலவும் அதிமுக கொடுத்ததை அப்படியே வாங்கிக் கொண்டுவிட்டன. அதனால் அவர்களைப் பற்றிய கவலை இப்போது தேவையில்லை.

திருச்சி வேலுச்சாமி
திருச்சி வேலுச்சாமி

‘இது இயல்புதான்!’

திமுக காட்டிய உதாசீனம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருச்சி வேலுச்சாமியிடம் பேசினேன். ‘’கூட்டணிப் பேச்சுவார்த்தை என்றால், குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அனைத்துக் கட்சிகளுமே தங்களுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்கித் தர வேண்டும் என்றும், அதிலும் சாதகமாக இருக்கும் இடங்களை தங்களுக்குத் தர வேண்டும் என்றும் கேட்கத்தான் செய்வார்கள். அதற்கேற்றவாறு இடங்களை ஒதுக்கும்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும்தான். அதைச் சரிசெய்து சுமூகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டியது திமுகவின் கடமை. இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதுள்ளதை விட அதிகமான இடங்களை திமுக தரும் என்றுதான் நினைக்கிறோம்” என்றார் வேலுச்சாமி.

சூர்யா வெற்றிகொண்டான்
சூர்யா வெற்றிகொண்டான்

திமுக சார்பில் விவாதங்களில் கலந்துகொள்ளும், தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டானிடம் இதுகுறித்துப் பேசினேன். ‘’கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைவான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது உண்மையல்ல. சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூட்டணியில் இருந்த அத்தனைக் கட்சிகளும் இப்போதும் கூட்டணியில் தொடர்கின்றன. அவை அனைத்துக்கும் உரிய இடங்களை ஒதுக்குவதால், குறைந்த எண்ணிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படுவது போல சித்தரிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு சென்னை மாநகராட்சியில் காங்கிரஸுக்கு 17 இடங்கள், விசிகவுக்கு 6 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஒருசில இடங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் பிடிவாதத்தால் கருத்துவேறுபாடுகள் வந்திருக்கலாம். அவை களையப்பட்டுவிட்டன. இதுமட்டுமில்லாமல் கட்சிக்காக உழைக்கும் திமுகவினருக்கும் சீட் கொடுக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளும் இதை உணர்ந்துகொண்டு ஒப்பந்தத்தை இறுதி செய்திருக்கின்றன. கட்சிகளும் ஏற்றுக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டன. நூறு சதவீதம் வெற்றியை எங்கள் கூட்டணி பெறும்” என்றார் அவர்.

என்னதான் குறைவான இடமும், அலட்சியப்படுத்துதலும் நடந்தாலும் வெற்றி என்ற இலக்கே முக்கியமாகப்படுவதால் கட்சிகள் அதை நோக்கியே நடைபோடுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in