இடைத்தேர்தல் விறுவிறுப்பில் ஈபிஎஸ் அணியினர்: என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

இடைத்தேர்தல் விறுவிறுப்பில் ஈபிஎஸ் அணியினர்: என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் போட்டியிட உள்ள நிலையில், ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது நாளை தெரிந்துவிடும்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா அண்மையிலும் மாரடைப்பால் உயிரிழந்தாா். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று திமுக கூட்டணி அறிவித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகாவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான ஈபிஎஸ் அணியினர் அண்மையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனையை சந்தித்து, இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடப் போவதாக தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். இதையடுத்து, கூட்டணி தர்மத்தை காக்கும் வகையில் அதிமுகவுக்கு தொகுதியை விட்டுக் கொடுப்பதாக ஜி.கே.வாசன் அறிவித்தார்.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இடைத்தேர்தலில் பணியாற்ற குழுவை நியமித்துவிட்டது. அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தொடர்பான எந்த ஒரு கருத்தையும் தமிழக பாஜகவிடமிருந்து இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் மீண்டும் ஆலோசனை நடத்தி போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

இந்த சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று பண்ருட்டி ராமச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்தாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து நாளை இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் பாஜகவின் ஆதரவை கேட்க எடப்பாடி பழனிசாமி அணியினர் நாளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேச இருக்கின்றனர். அப்போது பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும். மொத்தத்தில் இடைத்தேர்தல் அதிமுக - பாஜக இடையே உரசலை ஏற்படுத்துமா அல்லது சுமுகமாக முடிவடையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in