தொண்டர்களைக் காயப்படுத்திய ஓபிஎஸ்சுடன் எப்படி ஒன்றிணைய முடியும்?: ஈபிஎஸ் காட்டம்

தொண்டர்களைக் காயப்படுத்திய ஓபிஎஸ்சுடன் எப்படி ஒன்றிணைய முடியும்?: ஈபிஎஸ் காட்டம்

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் கசப்புகளை மறந்து ஒருங்கிணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “2017-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவிக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தோற்றுவிக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொது உறுப்பினர்களால் அல்ல.

அதிமுக சட்ட விதிகளின் படியும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கிளைக்கழக தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வந்தது. பொதுக்குழு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதிலாகப் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என அந்த தேர்தலில் மீண்டும் மாற்றத்தை கொண்டு வரப்பட்டு செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து நடக்கும் பொதுக்குழுவில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். செயற்குழுவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. 2663 பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். பொது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதன்படிதான் கட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் எனத் தொண்டர்கள் விரும்பினார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீரசெல்வம் காவல் துறையினருக்கும், பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கும் கலவரம் நடைபெறும் எனக் கடிதம் எழுதுகிறார். இந்நிலையில் பொதுக்குழு நடைபெறுவதற்குத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றம் சென்றார். இது எவ்வகையில் நியாயம்?

ஓபிஎஸ்சுக்கு உழைப்பு கிடையாது. ஆனால் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பதவி மட்டும் வேண்டும் என நினைக்கிறார். அவர் மகன் எம்பியாகவும், மத்திய மந்திரியாக ஆகவேண்டும் என நினைக்கிறார். மற்றவர்களைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. 2017-ல் எப்படி முறைப்படி பொதுக்குழு கூட்டப்பட்டதோ அதே நடைமுறையைப் பின்பற்றி 11.7.2022ல் பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழு நடைபெறும் நேரத்தில் ரவுடிகளை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கலவரத்தை ஏற்படுத்தினார். கட்சித் தலைமை பொறுப்பில் இருக்கும் இவரே இப்படிச் செயல்படுகிறார். இன்றைக்கு வரை ஜாமீன் கிடைக்காமல் சிலர் சிறையில் இருக்கிறார்கள்.

இப்படி இருக்க அவரோடு எப்படி ஒத்துப் போக முடியும். முதல்வர் வேட்பாளராகவும், எதிர்க் கட்சித் தலைவராகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது பிரச்சினைகளை ஏற்படுத்தினார். இதனால்தான் அதிமுக தோல்வியைத் தழுவியது. ஓபிஎஸ் மகன் திமுகவோடு தொடர்பில் இருக்கிறார். நான் எப்போதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in