வருகைப் பதிவேட்டைத் தூக்கிச் சென்ற ஈபிஎஸ் ஆதரவாளர்கள்; உள்ளே செல்ல முடியாமல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திண்டாட்டம்!

வருகைப் பதிவேட்டைத் தூக்கிச் சென்ற ஈபிஎஸ் ஆதரவாளர்கள்; உள்ளே செல்ல முடியாமல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திண்டாட்டம்!

வருகைப் பதிவேட்டை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதால் பொதுக்குழுவில் கலந்து கொள்ள முடியாமல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியே காத்திருக்கிறார்கள். இதனால் பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது

ஒற்றைத் தலைமை விவகாரம் வெடிக்க தொடங்கியதிலிருந்தே ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பிலும் காரசாரமான விவாதங்கள், கைகலப்பு, நீதிமன்ற தீர்ப்பு எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது அதிமுக வட்டாரம். பொதுக்குழு நடத்தலாம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தீர்ப்பில் பொதுக்குழு தீர்மானம் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காததால், ஈபிஎஸ் தரப்பினர் உற்சாகம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவே ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஓபிஎஸ் தரப்பினர் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை முதல் பொதுக்குழுவில் கலந்து கொள்ள இருதரப்பினரும் படையெடுத்து வருகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுத்தான் கலந்து கொள்ள முடியும். இந்நிலையில் பொதுக்குழு வருகைப் பதிவேட்டினை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே எடுத்துச் சென்றுவிட்டார்கள். கையெழுத்து போட முடியாமல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மண்டபத்திற்கு வெளியில் தவித்து வருகிறார்கள். கையெழுத்து போட்ட பிறகே பொதுக்குழுவில் கலந்து கொள்வோம் என ஓபிஎஸ் தரப்பினர் உறுதியாக இருக்கிறார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடும் சூழல் நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in