ஓபிஎஸ் பக்கம் தாவிய ஈபிஎஸ் ஆதரவாளர்: இன்னும் பலர் வருவார்கள் என்கிறார் வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்.
வைத்திலிங்கம்.

எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்த முக்கிய நிர்வாகி ஓ.பன்னீர்செல்வம் பக்கம் வந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

தஞ்சாவூரில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஈபிஎஸ் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், ஈபிஎஸ் செய்த பல சூழ்ச்சிகளைச் சொல்லாமல் அவருடைய நயவஞ்சத்தை வெளிப்படுத்தாமல் அவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது கூட, நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். மனக்கசப்புகளை மறந்து எதிர்காலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இந்த இயக்கத்தை வலுவான இயக்கமாக்கி மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற ஆளுங்கட்சியாக கொண்டு வருகிற செயலை முன்னிறுத்தி இந்த அவர் அழைப்பு விடுத்தார்.

ஆனால், அதை ஈபிஎஸ் ஏற்கமறுத்து விட்டார். இதையொட்டி அவர் வெளியிட் கருத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சி அடிமட்டத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நேற்றைய தினமே ஈபிஎஸ் பக்கம் இருந்த வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் ஓபிஎஸ்சை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இப்படி தினமும் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களை நோக்கி வர உள்ளனர். அதை நீங்கள் பார்க்க இருக்கத்தான் போகிறீர்கள்" என்றார்.

ஒற்றைத்தலைமை குறித்த கேள்விக்கு, " இந்த இயக்கம் கூட்டுத்தலைமை இருந்தால் தான் வலுவாக இருக்க முடியும்" என்றார். " அதிமுகவில் நடப்பது உள்கட்சி பிரச்சினை. இதில் பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளை இணைத்து பேசாதீர்கள். அத்துடன் இப்பிரச்சினையில்.மற்ற கட்சிகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை" என்றார்.

அழைப்பு விடுப்பது தான் ஓபிஎஸ்சுக்கு வாடிக்கை என ஈபிஎஸ் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, "ஓபிஎஸ் இணையும் போது அவருடன் பேசியதை ஈபிஎஸ் மறந்து விட்டார். அதைச் சொல்ல இது தகுந்த நேரமில்லை. ஓபிஎஸ்சை திட்டவட்டமாக சேர்க்க மாட்டோம் என்று ஈபிஎஸ் கூறுகிறார். அவர் சேராமல் இருக்கலாம். ஆனால், கோடிக்கணக்கான தொண்டர்கள் சேர தயாராக இருக்கிறார்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in