`ஆவணங்களை ஓபிஎஸ் கொள்ளையடித்து சென்றுவிட்டார்'- ஈபிஎஸ் ஆதரவாளர் காவல் நிலையத்தில் புகார்!

`ஆவணங்களை ஓபிஎஸ் கொள்ளையடித்து சென்றுவிட்டார்'- ஈபிஎஸ் ஆதரவாளர் காவல் நிலையத்தில் புகார்!

அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்குள் நேற்று ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் கற்களாலும், கட்டைகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போலக் காட்சியளித்தது. நேற்று நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து அங்கு வந்த வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்திருந்தனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள காவல்துறையினர், “அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் ஒரு தரப்பில் 24 பேர், இன்னொரு தரப்பில் 20 பேர், காவல்துறையில் 2 பேர் என என மொத்தம் 47 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்சி அலுவலகத்திற்கு உரிமை கோருவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக பொது அமைதி பாதிக்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு, பொது அமைதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய வரும் 25-ம் தேதி இருதரப்பினரும் தாமாகவோ, வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருதரப்பினரும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தேவையான உத்தரவைப் பெறுமாறும், கட்சி அலுவலகத்திற்கு பொறுப்பாளராக மயிலாப்பூர் வட்டாட்சியரை நியமித்து, வருவாய்க் கோட்டாட்சியர் உத்தரவுப்படி செயல்படப் பணித்துள்ளார்” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்சென்னை வடக்கு-கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் தரப்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் அனைத்தையும் கொள்ளையடித்து அவர் கொண்டு வந்த வெள்ளை நிற டெம்போவில் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் பெயர்களும் அந்த புகார் மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் மீட்டுத்தருமாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in