வேலுமணி குடும்பத்தினருக்காக குரல் கொடுக்கும் ஈபிஎஸ்: ஆதாரங்களை அடுக்கும் ஆ.எஸ்.பாரதி

வேலுமணி குடும்பத்தினருக்காக குரல் கொடுக்கும் ஈபிஎஸ்: ஆதாரங்களை அடுக்கும் ஆ.எஸ்.பாரதி

"முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ஒதுக்கிவிடாமல் செயல்படுத்தி வருகிறோம். எடப்பாடி பழனிசாமி மக்களுக்காகப் பேசாமல் வேலுமணி குடும்பத்திற்காகப் பேசி வருகிறார்" என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் “தமிழக முதல்வர் கோவைக்குச் சென்ற போது பொதுமக்கள் திரளாக அவரை வரவேற்றனர். இதையெல்லாம் மீடியாக்களில் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி இல்லாததையும், பொல்லாததையும் பேசி வருகிறார். திமுக ஆட்சி வந்த பிறகு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எந்த திட்டத்தையும் கைவிடவில்லை.

கோவையில் புதிய பேருந்து நிலையப் பணிகளைக் கைவிட்டு விட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் வேலுமணியினுடைய குடும்பத்தினர்தான் அப்பகுதியில் நிலங்களை வளைத்துப் போட்டு வைத்துள்ளனர். அந்த இடத்தில் பேருந்து நிலையம் கட்ட அதிமுக தேர்வு செய்தது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.

அந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைவதைக் கோவை மாநகர மக்களே விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி மக்களுக்காகப் பேசாமல் வேலுமணி குடும்பத்திற்காகப் பேசி வருகிறார்.

அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டம் 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்து ஓரிரு மாதத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. திமுக ஆட்சி வந்த பிறகு முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை ஒதுக்கிவிடாமல் அனைத்து பணிகளையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 1800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவையில் நேற்று தெரிவித்துள்ளார்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரிலே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரித்து அதற்கான விசாரணை அறிக்கையைப் பெற்றிருக்கிறோம். இதையெல்லாம் மூடி மறைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி அவதூறாகப் பேசி வருகிறார்.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in