ஸாரி, வணக்கம்: ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்ற ஈபிஎஸ்

ஸாரி, வணக்கம்: ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்ற ஈபிஎஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, ஸாரி, வணக்கம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றார்.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோருடன் டெல்லி சென்றுள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "மத்திய உள்துறை அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகத்தை பொருத்த வரைக்கும் இரண்டு பிரதான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நான் முதல்வராக இருக்கும்போது பிரதமரை பலமுறை சந்தித்து வலியுறுத்தியிருந்தேன். ஒன்று, கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு தேவையான நீர் கிடைக்கும். அந்தத் திட்டத்தை வேகப்படுத்தி நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று தற்போது உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறோம்.

இரண்டாவது, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். காவிரியில் கலக்குகின்ற மாசுபட்ட நீரை சுத்தம் செய்து காவிரி விடுவதற்காக இந்த திட்டத்தை பிரதமர் அறிவித்தார். அதையும் வேகமாக, துரிதமாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதோடு தமிழகத்தில் அடியோடு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. தமிழகம் முழுவதும் தடையின்றி போதைப் பொருள்கள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து வருகின்ற சூழ்நிலையை எடுத்துச் சொல்லி இருக்கிறோம். இதை ஏற்கெனவே நான் பலமுறை சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். தற்போது இருக்கிற முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன். அறிக்கையின் வாயிலாக தெரிவித்தோம். ஆனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.

அதோடு உயர்கல்வித்துறை அமைச்சர் பேசுகிறபோது தமிழகத்தில் போதை பொருள் குறித்து பேட்டி அளித்தார். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசினுடைய கடமை. எங்கே போதை பொருள் விற்பனை செய்தாலும் அல்லது அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தாலும் அதை தடுத்து நிறுத்தி சட்ட ரீதியாக யார் இந்த செயலில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்த அரசு மெத்தனமாக இருக்கின்ற காரணத்தினால் தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க தவறி விட்டார்கள். அதனால் மத்திய உள்துறை அமைச்சரிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.

அதோடு தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறிகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதையும் நாங்கள் மத்திய உள்துறை அமைச்சரிடம் சுட்டிக்காட்டி இருக்கின்றோம். தமிழகத்தில் உள்ள எல்லாத் துறைகளிலும் கமிஷன், கலெக்சன், கரப்சன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு துறையிலும் நியாயமான முறையில் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதையும் தெரிவித்து இருக்கின்றோம். அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. அதிமுக தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதினால் அது குறித்து கருத்து சொல்ல இயலாது. எல்லாமே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கின்ற காரணத்தினால் நாங்கள் கருத்து சொன்னால் அது நீதிமன்ற வழக்கு விசாரணையை பாதிக்கும். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறேன். ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இன்று தமிழகத்தில் சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடுமையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. மக்கள் வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது முறையா" என்று கேள்வி எழுப்பினார்.

இதன் பின்னர் செய்தியாளர்கள் ஓபிஎஸ் குறித்து கேள்வி எழுப்பினர். ஸாரி, வணக்கம் என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in