`உங்களுக்கு பரபரப்பு செய்தி வேண்டும்'- புகழேந்தி குறித்த கேள்வியால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

`உங்களுக்கு பரபரப்பு செய்தி வேண்டும்'- புகழேந்தி குறித்த கேள்வியால் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தியை கடுமையாக விமர்சித்து பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிவாரண உதவிகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி ஒப்படைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை, தர்மம் வென்றிருக்கிறது. நீதிமன்றத்தின் மூலமாக நல்ல தீர்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக பொது குழு தீர்மானிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது. விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும்.

அதிமுக அலுவலகத்திற்கு நாங்கள் செல்வோம் என்று புகழேந்தி கூறியிருக்கிறார். இவர் யார். அதிமுக உறுப்பினர் அல்ல. ஏற்கெனவே அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் புகழேந்தி. இவர் ஏற்கெனவே அதிமுகவில் இருந்தார். கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட காரணத்தாலே அவரை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியது. இந்த கட்சிக்கு அவருக்கும் சம்பந்தமே கிடையாது. இரண்டாவது, இவர் ஒரு பெரிய ஆளே கிடையாது. ஊடகங்கள், பத்திரிகைகள் தான் அவரை பெரியாளாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு வார்டு உறுப்பினர் வாங்கும் வாக்கை கூட அவரால் வாங்க முடியவில்லை. ஓசூரில் அமமுக சார்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். நோட்டோவுக்கு விழுந்த வாக்கை விட இவர் வாங்கின வாக்கு குறைவு. சுமார் 2000 வாக்கு தான் வாங்கினார் என்று நினைக்கிறேன்.

அப்படிப்பட்டவர் இந்த ஊடகத்தையும் பத்திரிகையும் பயன்படுத்தி தான்தான் பெரிய ஆள் போலவும் அரசியல்வாதி போலவும் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் மக்கள் செல்வாக்கை இழந்த ஒரு நபர். அவரைப் பற்றி பேசுவது சரி இல்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் கேள்வி கேட்பதனால் தான் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் விவாத மேடையில் வைத்து கருத்து கேட்கிறீர்கள். கேவலமாக இல்லையா? ஊடகத்துக்கே கேவலம். சரியான நபரை அமர வையுங்கள். நிறைய பேர் இருக்கிறார்கள். நடுநிலையாளர்கள் இருக்கிறார்கள். தகுதியான நபர்களை நீங்கள் அமர வைத்து விவாதம் செய்ய வேண்டும். உங்களுக்கு பரபரப்பு செய்தி வேண்டும். யார் வேண்டுமானாலும் அமர வைத்துவிட்டால் இப்படிப்பட்ட செய்தி தான் கிடைக்கும். நல்ல செய்திகள் எங்கே கிடைக்கும்.

ஒருவருடைய செல்வாக்கு தேர்தலை பொறுத்துதான் இருக்கிறது. புகழேந்தி எவ்வளவு வாக்கு வாங்கினார் என்பது உங்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட மக்கள் சக்தி இழந்த ஒருவரை பத்திரிகையும் ஊடகமும் பெரிதுபடுத்தி கூறுகிறது சரியல்ல. அது மட்டுமல்ல ஜெயலலிதா இருக்கும்போது அவருக்கு பெங்களூருவில் கழகப் பொதுச் செயலாளர் பதவி கொடுத்தார். அங்கு கட்சியை ஒன்று இல்லாமல் ஆக்கிவிட்டார். பெங்களூருவில் அதிமுக வெற்றி பெற்ற கட்சி. ஆனால் இவர் பொறுப்புக்கு வந்த பிறகு அங்கே அதிமுகவை அழிவுக்கு அடித்தளமிட்டவர். இவருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம். இவர் என்ன பெரிய அரசியல்வாதியா?" என்று கொந்தளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in