`துரைமுருகனும், பொன்முடியும் எவ்வளவு நக்கலாக பேசுறாங்க பாருங்க'- ஆர்ப்பாட்டத்தில் பொங்கிய ஈபிஎஸ்

`துரைமுருகனும், பொன்முடியும் எவ்வளவு நக்கலாக பேசுறாங்க பாருங்க'- ஆர்ப்பாட்டத்தில் பொங்கிய ஈபிஎஸ்

அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கின்றன, 2030-ல் அடைய வேண்டிய இலக்கை 2019-ல் அடைந்தோம். உயர் கல்வியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருந்தது ஸ்டாலின் அவர்களே. 2017-ல் 100க்கு 34 பேர் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தார்கள். ஜெயலலிதா ஆட்சியில் ஏராளமான கல்லூரிகள் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது இந்தியாவிலேயே 100க்கு 52 பேர் உயர் கல்வி படிக்கின்ற சூழ்நிலையை உருவாக்கித் தந்தோம். இதுதான் சாதனை. திராவிட மாடல், திராவிட மாடல் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுகிறார். இந்த திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுகதான். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் அம்மா கிளினிக் திறந்தோம். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 64 மினி கிளினிக்கை நாங்கள் திறந்து கொடுத்தோம். 68 அம்மா மெடிக்கல் திறந்தோம். இன்றைக்கு விஷக்காய்ச்சல் அதிகமாக பரவிக்கொண்டிருக்கின்றன.

காய்ச்சலுக்கு என்னென்னமோ பெயர் சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட காய்ச்சல்கள் வருகின்றபோது அந்த பகுதியில் இருக்கின்ற ஏழை மக்கள் அங்கே இருக்கிற அம்மா கிளினிக்கிற்கு சென்று மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதில் என்ன தவறு இருக்கிறது. இதில் என்ன அரசியல் இருக்கிறது. அதிமுக கொண்டு வந்த திட்டமா? அதை மூடு விட்டார்கள். தற்போது, அம்மா சிமெண்ட், அம்மா உணவகம் மூடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஏழை மக்களின் பிரதான தொழில் பட்டாசு தயாரிக்கும் தொழில் தான். இன்று உற்பத்தியாளர்கள் பாதிக்கிறார்கள், அதில் பணிபுரிகிற தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த தொழிலை காப்பாற்றுவதற்கு கடந்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி உச்சநீதிமன்றத்திலே மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடினோம். மக்களுக்கு துன்பம் வருகிற போது, மக்கள் வேதனையடைகிற போது அதிலிருந்து விடுவிப்பதற்காக அதிமுக அரசு இவ்வளவு முயற்சிகளை எடுத்ததை யாராலும் மறுக்க முடியாது. இந்த அரசாங்கமும் ஆட்சி பொறுப்பேற்று 16 மாதங்கள் ஆகிவிட்டது. இதற்கு எந்த முயற்சியாவது எடுத்தார்களா? இதற்கு தீர்வு தந்தார்களா? ஒன்றுமே கிடையாது. இன்றைக்கு இருக்கிற உயர் கல்வித்துறை அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது, ஓசில பஸ்ல போறீங்க என்று சொல்கிறார். உங்க அப்பன் வீட்டு சொத்தையா நீ கொடுக்கிற, மக்களுடைய வரிப்பணம். மக்களுடைய பணத்தை எடுத்து மக்களுக்கு நன்மை செய்கிறோம். எந்த ஆட்சியாக இருந்தாலும் இப்படித்தான் செயல்படும். இதற்கு பல தாய்மார்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எங்களை அவமானப்படுத்தாதீர்கள் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கூறுகிறார்கள்.

இன்னும் ஒருபடி மேலே போய் இப்போது இருக்கிற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒரு கருத்து சொல்கிறார். இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டீர்களே. அதைப் பற்றி அவர் சொல்கிறபோது, நாங்கள் சில்லறை மாற்றிக் கொண்டு இருக்கிறோம் என்று சொல்கிறார். இப்போதுதான் சில்லறையை ஆரம்பித்து இருக்கிறார்கள். எவ்வளவு நக்கலாக பேசுறாங்க பாருங்க. ஓட்டு போட்ட மக்களுக்கு எப்படிப்பட்ட வார்த்தை கிடைக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள். கவர்ச்சிகரமான அறிவிப்பை கொடுத்து மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடித்துக் கொண்டு ஆட்சிக்கு வந்ததும், இறுமாப்போடு இந்த அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in