இறங்கி வந்த ஓபிஎஸ்... ஏற்க மறுத்த ஈபிஎஸ்: உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக

இறங்கி வந்த ஓபிஎஸ்... ஏற்க மறுத்த ஈபிஎஸ்: உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக

நடைபெற உள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்குவதற்கான படிவங்களில் கையெழுத்து போட தயார் என ஓபிஎஸ் முன்வந்த போதும், அதனை ஏற்க ஈபிஎஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று மாலை 3 மணிக்குள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கான படிவம் ஏ மற்றும் பி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இவற்றில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்து இடவேண்டும்.

ஆனால் தற்போது நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்சினையில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் அந்தப் படிவங்களில் கையெழுத்து பெற ஈபிஎஸ் தரப்பினர் விரும்பவில்லை. அதனால் வேட்பாளர்களுக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்ட படிவம் இதுவரை வழங்கப்படவில்லை. அந்த படிவம் வழங்குவதற்கு இன்று கடைசி நாள் என்பதால நேற்று இரவு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தானே முன்வந்து கையெழுத்திட தயாராக இருப்பதாக ஈபிஎஸ் தரப்பிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

ஓபிஎஸ் அனுப்பிய கடிதம்
ஓபிஎஸ் அனுப்பிய கடிதம்

இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சித் தலைமை அலுவலகம் முகவரியிட்டு ஓபிஎஸ் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ``வணக்கம், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார். இதனை மேலாளர் மகாலிங்கம் வழியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்கும் வகையில் ஓ பன்னீர்செல்வம் அனுப்பியிருந்தார்.

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கட்சியின் பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றம் சென்றது, தற்போது வரை விடாமல் குடைச்சல்கள் தருவது ஆகியவற்றால் ஓ.பன்னீர்செல்வம் உடனான எந்த சமரசத்தையும் ஏற்க ஈபிஎஸ் தயாராக இல்லை. இந்த தேர்தலில் கட்சி சின்னம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை. இனி வரும் தேர்தல்களில் தானே கையெழுத்து போடும் நிலை வந்து விடும் என்பதால், இப்போது அவரிடம் சமரசம் செய்து கொள்வது தேவையில்லை என்று கருதும் ஈ.பி.எஸ், அந்த கடிதத்தை வாங்கவே மறுத்துவிட்டாராம்.

இதனால் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் இரட்டை இலை சின்னம் இல்லாமலே அதிமுக வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in