திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை, ஸ்டாலின் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்: ஈபிஎஸ் கிண்டல்

பாதிக்கப்பட்டுள்ள பயிர்களைப் பார்வையிடும் ஈபிஎஸ்
பாதிக்கப்பட்டுள்ள பயிர்களைப் பார்வையிடும் ஈபிஎஸ்

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் தான் தமிழகத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால்,  மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் நல்லூர், எடமணல், சீர்காழி, திருவாலி,  தலைச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், விளைநிலங்களையும் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம்  கூறுகையில், "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டது. போதைப்பொருள் தங்கு தடையின்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கிடைப்பதால், இளைய தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி நிச்சயம் அமையும். இதில் அமமுகவுக்கு ஒருபோதும் இடம் கிடையாது.

தமிழகத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் மழை வெள்ள பாதிப்புகளைப் பார்க்கச் சென்ற இடங்களில் எல்லாம் அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ யாரும் வந்து பார்க்கவில்லை என்று பொதுமக்கள் கண்ணீர் மல்க வேதனையை தெரிவித்துள்ளனர். உண்மையில் ஸ்டாலின்தான் மகிழ்ச்சியாக உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.

சீர்காழி தாலுகாவில் திருவெண்காடு பகுதிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல்   சென்றதாக அங்குள்ள மக்கள் என்னிடம் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்  கடந்த 2021 ஜனவரி 16-ம் தேதி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்,  பழனிசாமி வழங்குவாரா என்று அறிக்கை வெளியிட்டார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது கேள்வி எழுப்பிய ஸ்டாலின் தற்போது முதல்வராக உள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவாரா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாக்களில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.  ஆனால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை,  குத்தாலம் தாலுகா மக்களுக்கும் சேர்த்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 நிவாரணமாக வழங்க வேண்டும். 10 நாட்களாக வேலை இல்லாததால் தினக்கூலி தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

திருவாலி ஏரி உட்பட கடைமடை பகுதியில் உள்ள அனைத்து பாசன வடிகால் வாய்க்கால்களையும் தூர்வாரி மழைநீரை வடிய வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகளைக் கொண்டு முறையாக கணக்கெடுத்து நிவாரண உதவிகளை அறிவிக்க வேண்டும்"  என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in