தினகரனுக்கு நோ என்ட்ரி; பாஜகவை பகைக்கத் தயாராகும் பழனிசாமி!

தினகரனுக்கு நோ என்ட்ரி; பாஜகவை பகைக்கத் தயாராகும் பழனிசாமி!

டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை உள்ளடக்கிய அதிமுக அணியை உருவாக்க பாஜக செயல்திட்டம் வகுத்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பின் கடும் எதிர்ப்பால் இப்போது காட்சிகள் வேகமாக மாறி வருகின்றன. சசிகலா உள்ளிட்டவர்களை உள்ளே கொண்டுவர மேற்கொண்டும் வலியுறுத்தினால் பாஜகவை பகைக்கவும் பழனிசாமி தயாராகி விட்டதாகச் சொல்கிறார்கள்.

“அதிமுகவின் கொள்கை வேறு... பாஜகவின் கொள்கை வேறு. தனிப்பட்ட முறையில் தமிழகம் வரும் மோடி, அமித்ஷாவை ஏன் நாங்கள் வரவேற்க வேண்டும். அதிமுக கட்சி வேறு, பாஜக வேறு. அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி; 31 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்ட கட்சி. பாஜக ஒரு தேசிய கட்சியாக இருந்தாலும் 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும். அந்தக் கூட்டணியில் டிடிவி தினகரனுக்கு நிச்சயம் வாய்ப்பில்லை’’ என்கிறார் ஈபிஎஸ். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அவர் இந்த அளவுக்கு அழுத்தமாகப் பேசி இருப்பதற்கு பாஜகவின் தொடர் அழுத்தங்களே காரணம் என்கிறார்கள். 

’’அதிமுக என்ற கட்சியும், சின்னமும் கையில் இல்லாமல் தவித்து வருகிறார் எடப்பாடி.  பிரதமர் யார் என்று தீர்மானிக்கும் கூட்டணியை நாங்கள்  அமைப்போம்” என்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் சொன்னார் டிடிவி தினகரன். அண்மைக் காலமாக இருக்குமிடம் தெரியாமல் இருந்த தினகரன், தற்போது சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்திருப்பதும் ஈபிஎஸ்ஸை தீவிரமாக எதிர்ப்பதும் அவருக்கு பாஜக அளித்திருக்கும் உத்தரவாதத்தையும், ஈபிஎஸ்ஸுக்கு இருக்கும் கட்டாயங்களையும் உணர்த்துவதாகவே தெரிகிறது.

ஓபிஎஸ்,  ஈபிஎஸ்
ஓபிஎஸ், ஈபிஎஸ்

தினகரன், சசிகலா, ஓபிஎஸ் மூவரையும் அதிமுக அணிக்குள் கொண்டு வரும் பாஜகவின் திட்டத்துக்கு, தான் தயாராக இல்லை என்பதால் பாஜகவுக்கு எதிரான கருத்தை துணிச்சலாக முன்வைக்க தொடங்கியிருக்கிறார் ஈபிஎஸ். ஆனால், தங்களின் ஒருங்கிணைப்புத் திட்டத்துக்கு ஒத்துழைக்க மறுத்தால் அதிமுக என்ற கட்சியும் இரட்டை இலையும் உங்கள் வசம் இருக்காது என்பதை தினகரன் மூலமாக பாஜக மறைமுகமாக ஈபிஎஸ்ஸூக்கு உணர்த்தியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

தினகரன் உள்ளிட்டவர்களை அணியில் இணைக்க மறுத்தால் இரட்டை இலை சின்னமும் கிடைக்காது...  கட்சியின் பெயரும் கிடைக்காது என்பது கிட்டத்தட்ட அமித்ஷாவால் ஈபிஎஸ்ஸுக்கு உறுதிபடச் சொல்லிவிட்டதாக பாஜக தரப்பில் சொல்கிறார்கள். அந்தக் கோபத்தின் காரணமாகவே, சென்னை வந்த அமிதாவை சந்திக்க மறுத்ததுடன், அவரைச் சந்திக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று ஈபிஎஸ் கடுகடுத்ததாகச் சொல்கிறார்கள்.

இணைப்புத் திட்டத்துக்கு ஈபிஎஸ் ஒத்துவராத நிலையில் காமதேனுவில் நாம் முன்பே சொல்லி இருந்தபடி, தங்களுடன் தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை கூட்டணி சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கும் பாஜக, “எங்களுக்கு 50 சதவீத இடங்களை கொடுத்து விடுங்கள்” என்று ’பி பிளான்’ ஒன்றை  ஈபிஎஸ்ஸுக்கு சொல்லி இருக்கிறதாம். அதாவது, தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை எங்களிடம் கொடுத்து விடுங்கள்.  நாங்கள் அதை கூட்டணிக் கட்சிகளுக்குள் பங்கிட்டுக் கொள்கிறோம், மீதமுள்ள  20 தொகுதிகளில் நீங்கள்  போட்டியிடுங்கள் என்பதாம் பாஜக தலைமையின் திட்டம். 

ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் வெறும் ஐந்து இடங்களை மட்டுமே பெற்ற நிலையில், தற்போது 20 இடங்களைப் பெற்று  கூட்டணிக் கட்சிகளை தங்களோடு இணைக்க நினைக்கும் பாஜகவின் பிளானுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் கணக்குகளை உணர்ந்துகொண்டுவிட்ட  ஈபிஎஸ், அதற்கும் மறுத்துவிட்டாராம்.  

தினகரன்
தினகரன்

இதையடுத்து அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டவர்களை சந்தித்த அமித்ஷா, “20 இடங்களில் நாமும் நம் கூட்டணிக் கட்சியினரும் போட்டியிடுவது உறுதி.  தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி. அதனால் நீங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்துங்கள். அதிமுகவை பற்றி கவலைப்பட வேண்டாம்; அதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று உறுதிபடச் சொல்லி அனுப்பினாராம்.

அமித்ஷா கொடுத்த உத்தரவாதத்தை அடுத்து, நாகர்கோவிலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், கோவைக்கு சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூர் அல்லது ஈரோட்டுக்கு அண்ணாமலை, நீலகிரிக்கு எல்.முருகன், ராமநாதபுரத்துக்கு பொன்.பாலகணபதி, தேனிக்கு ஓ.பி.ரவீந்திரநாத், வேலூருக்கு ஏ.சி.சண்முகம், பெரம்பலூருக்கு பாரிவேந்தர் என கூட்டணியில் இருப்பவர்களுக்கும் சேர்த்து முதல்கட்ட தொகுதிகளை தமிழக பாஜக தரப்பில் ஃபிக்ஸ் செய்துவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது.

அதேசமயம், இப்படி தன்னை மிரட்டி வழிக்குக் கொண்டுவரப் பார்க்கும் பாஜகவின் உத்திகளால் கடும் ஆத்திரத்தில் இருக்கிறாராம் ஈபிஎஸ். அதனால்தான் தமிழக அரசியல் களத்தில் தனது கவனத்தை தீவிரமாக திருப்பியிருக்கிறார். நாமும் பாஜகவை தற்போது பொருட்படுத்தத் தேவையில்லை, அதைவிடுத்து அதிமுகவில் நமக்கான இருப்பை வலுப்படுத்துவோம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் ஈபிஎஸ், அதற்காகவே பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணித்து தொண்டர்களைத் திரட்டி வருகிறார். அங்கெல்லாம் திமுக ஆட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்களையும் வைத்து வருகிறார். அதேசமயம், முன்னைப் போல் இல்லாமல் இப்போது பாஜக தலைவர்களை சந்திப்பதையும் சாதுர்யமாக தவிர்த்தும் வருகிறார் ஈபிஎஸ். 

அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அடிக்கடி பாஜகவுக்கு நினைவூட்டி வருகிறார் ஈபிஎஸ். ஆனால், அந்தக் கூட்டணியை பாஜக தான் கட்டமைத்து வருகிறது என்பதை நாம் இதற்கு முந்தைய கடந்த வார கட்டுரையிலேயே சுட்டிக்காட்டினோம். இப்போது, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என பாமகவும் வெளிப்படையாக தெரிவித்துவிட்டது. தேமுதிக அதிமுக அணியிலிருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்டது. புதிய நீதிக்கட்சியும் தமாகாவும் ஏற்கெனவே பாஜகவுக்குள் ஐக்கியமாகியிருக்கிறது. அதனால் ஈபிஎஸ்ஸை நிராயுதபாணியாக நிறுத்தி சரணடைய வைக்கவே பாஜக முயன்று வருகிறது. அதனாலேயே பாஜகவை பகையாக பார்க்கத் தொடங்கியிருக்கிறார் ஈபிஎஸ். 

ஈபிஎஸ்ஸை  தங்களது வழிக்கு கொண்டு வர அவருக்கு நெருக்கமானவர்களைக் குறிவைத்து வருமானவரி மற்றும் அமலாக்கத் துறையினரின் சோதனைகள் முடுக்கிவிடப் படுகின்றன. ஆனால், அதற்கெல்லாம் ஈபிஎஸ் அசந்ததாகத் தெரியவில்லை. ஆனால், அவரால் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி உறுதியாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால்... அவரின் உறுதியைக் குலைத்து தாங்கள் நினைத்ததை அடைய மோடி - அமித்ஷா கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லும். அதுதானே கடந்த கால வரலாறு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in